மலையாள திரையுலகமே பிரமித்து கிடக்கிறது சமீபத்தில் வெளியான காயம்குளம் கொச்சுன்னி படத்தின் மிகப்பெரிய வெற்றியை பார்த்து. மோகன்லால்-நிவின்பாலி என்கிற மாஸ்-கிளாஸ் ஹீரோக்களை ஒன்றிணைத்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவரா இப்படி ஒரு படத்தை இயக்கியுள்ளார் என நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும்.. ஆனால் அவரது முந்தைய படங்களின் பட்டியலை விக்கிபீடியாவில் தேடிப்பார்த்தீர்கள் என்றால் உங்கள் வியப்பு இன்னும் பலமடங்காகி விடும். ஒரு வட்டத்திற்குள் தன்னை அடைத்துக்கொள்ளாமல் விதவிதாமான கலன்களில் விளையாடும் வித்தகர் தான் ரோஷன் ஆண்ட்ரூஸ்..
சரி. இந்தப்படத்திற்கு வருவோம். 1800களில் நடைபெறும் கதை இது.. அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய கள்ளனாக, மக்களுக்கு வாரி வழங்கும் ராபின்ஹூட்டாக கோலோச்சிய ‘காயம்குளம் கொச்சுன்னி’ என்பவனை பற்றிய கதை.. தந்தைக்கு திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு அவர் அனுபவித்த சித்தரவதையை கண்டு, வறுமையின் பிடியில் சிக்கியிருந்தாலும் வாழ்க்கையில் திருடவே கூடாது என்கிற வைராக்கியத்தில் இருப்பவன் கொச்சுன்னி. இவன் எப்படி அரசாங்கத்தையே அலறவிடும் கொள்ளைக்காரன் ‘காயம்குளம் கொச்சுன்னி’யாக மாறினான் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
ஒரு அப்பாவி இளைஞன், எப்படி அதிகார வர்க்கத்தின், ஆதிக்க சாதியின் அடக்குமுறைக்கு ஆளாகி கொள்ளையனாக உருவெடுக்கிறான் என்பதை தனது இயல்பான நடிப்பு மூலம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பிசிறில்லாமல் பிரதிபலித்திருகிறார் நிவின்பாலி, ஆக்சன் காட்சிகளில் குறிப்பாக, களரி பயிற்சி காட்சிகளில் அவரது கற்றலும் பயிற்சியும் அதை செயல்படுத்திய விதமும் பிரமிப்பூட்டுகிறது. அதேபோல சாதாரண ஆளாக இருந்து கொள்ளையனாக மாறுவது வரை உடல்மொழி, தோற்றம் என மிகச்சரியாக வித்தியாசம் காட்டியிருக்கிறார் நிவின்பாலி.
கெஸ்ட் ரோல் தான் என்றாலும் சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் திரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி செல்லும் இத்திக்கர பக்கி என்கிற கொள்ளையனாக தூசி படிந்த உடலும் உடையுமாக வரும் மோகன்லால் ரொம்பவே ஆச்சர்யப்படுத்துகிறார்.
இத்தனை வருட பயணத்தில் நடிகை பிரியா ஆனந்திற்கு இதில் ரொம்பவே அழுத்தமான கதாபாத்திரம் என்று சொல்லலாம். அதேசமயம் முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்கவிருந்த அமலாபால் இந்தப்படத்தில் இருந்து ஏன் விலகினார் என்கிற காரணமும் நமக்கு புரிகிறது. நிவின்பாலியை பிடிக்க கங்கணம் காட்டிக்கொண்டு அலையும் வெள்ளைக்கார ஏவல் அதிகாரியாக சன்னி வெய்ன் மிகப்பொருத்தமான வில்லனாக தெரிகிறார்..
களரி பயிற்சி தரும் குருவாக பாபு ஆண்டனி கம்பீரம்.. அன்பை விட திறமைக்கு மதிப்பு கொடுக்கும் இடத்தில் உயர்ந்து நிற்கிறது இவரது கேரக்டர். நம்ம எம்.எஸ்.பாஸ்கரும் படம் முழுதும் வரும் கேரக்டரில் அழகாக பொருந்தி ஆச்சர்யமூட்டுகிறார். மற்றும் கதையில் நடித்துள்ள மற்றவர்களும் தங்கள் நடிப்பால் நம்மை 18ஆம் நூற்றாண்டிற்கே அழைத்து சென்றுவிடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான் இந்தப்படத்தின் மூன்றாவது ஹீரோ என சொல்லும் அளவுக்கு புகுந்து விளையாடி இருக்கிறார். இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை அமைப்பதில் தான் எப்போதுமே கிங் என்பதை புலி முருகன் படத்திற்குப்பின் இதில் மீண்டும் நிரூபித்துள்ளார் கோபிசுந்தர். கதை பதினெட்டாம் நூற்றாண்டில் நடப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அதன் பின்னணியில் கைவண்ணம் ஒளிந்துள்ள கலை இயக்குனரின் கடும் உழைப்பை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
படம் வழக்கத்தை விட சற்றே நீளம் தான் என்றாலும் எந்த ஒரு இடத்திலும் அலுப்பு தட்டாதபடி, கதைக்கு தேவையான காட்சிகளால் படம் முழுதும் ரசிகர்களை கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். குறிப்பாக அந்த கால் மணி நேர க்ளைமாக்ஸ் காட்சி பிரமிக்க வைக்கிறது. நிஜமாகவே வாழ்ந்து மறைந்த ஒரு கொள்ளையனின் வாழ்க்கையை மிக நேர்த்தியான பதிவாக மாற்றியிருக்கிறார். அதற்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்..
எச்சரிக்கை ; காயம்குளம் கொச்சுன்னி படத்தை பார்க்க தவறினால் ஒரு மிக அற்புதமான, பதினெட்டாம் நூற்றாண்டு பயணத்தை, அது கொடுக்கும் அனுபவத்தை தவறவிட்டவர் ஆகிவிடுவீர்கள்.