மனுசங்கடா – விமர்சனம்


தீண்டாமையின் கொடூரத்தை வலியுடன் அழுத்தமாக பதியவைக்கும் இன்னொரு படம் தான் ‘மனுசங்கடா’.. பல திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிய பெருமையுடன் ரசிகர்களை தியேட்டரில் சந்திக்க வந்திருக்கிறது.

சென்னையில் வேலைபார்க்கும் ராஜீவ் ஆனந்த் (கோலப்பன்), தனது தந்தை இறந்த தகவல் கிடைக்க கடலூர் பக்கமுள்ள தனது கிராமத்திற்கு கிளம்பி செல்கிறார். ஊரில் நிலவும் தீண்டாமை கொடுமை காரணமாக கீழ்சாதி என கூறி அவர் தந்தையின் உடலை பொதுப்பாதையில் மயானத்திற்கு எடுத்து செல்ல வழிவிட மறுக்கின்றனர். இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனிப்பதையோ முட்புதர்கள் மண்டி பயன்படுத்த வழி இல்லாமல் இருக்கிறது.

தந்தையின் உடலை வாசலில் போட்டுவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்று பொதுப்பாதையை பயன்படுத்தும் உத்தரவை பெற்று வருகிறார். ஆனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஆதிக்க சாதிகளுக்கு துணையாக நிற்கின்றனர். இதைமீறி சாமானிய மக்களால் என்ன செய்ய முடிந்தது..? ராஜீவ் ஆனந்த் தனது தந்தையை நல்லடக்கம் செய்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

என்னதான் நாகரிக வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் என்றாலும், குக்கிராமங்களில் சாதியின் பெயரால் சவடால் பேசிக்கொண்டு இன்னும் பலர் மனதளவில் நோயாளிகளாகவே இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை இந்தப்படத்தில் வெகு அழகாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

கோலப்பனாக வரும் ராஜீவ் காந்தி தங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என இயல்பான கோபத்தை படம் முழுதும் வெளிப்படுத்தி நடித்துள்ளார். இறுதிக்காட்சியில் இயலாமை மனதை உடைக்க பெருங்குரலெடுத்து அழுகிறார் பாருங்கள்.. நம்மையும் மீறி நம் கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது.

கோலப்பனின் காதலியாக சென்னைபெண்ணாக நடித்துள்ள ஷீலா ராஜ்குமாரின் நடிப்பில், துக்க வீட்டில் அவர் கடமையாற்றும் பாங்கில் அவ்வளவு யதார்த்தம். போலீஸ் அதிகாரி, தாசில்தாராக நடித்துள்ளவர்கள் அனைவருமே கூட ஆதிக்க சாதிக்கு தாங்கள் நெருக்கமானவர்கள் என்பதுபோன்ற உணர்வை இயல்பாக பிரதிபலித்துள்ளனர்.

ஒரு எளிய கிராமத்துக்குள் நிகழும் ஒரு மரண அவலத்திற்கு சாட்சியாக நாமும் நிற்பது போன்ற உணர்வை அரவிந்த்-ஷங்கரின் இசையும், பி.எஸ்.தரணின் ஒளிப்பதிவும் படம் முழுதும் நம்மிடம் ஏற்படுத்துகின்றன.. ஒன்றை மணி நேரமே ஓடும் படத்தில் காட்சிகள் மெதுவாக நகர்வது போல இருந்தாலும், எந்த இடத்திலும் செயற்கைத்தனம் கலந்துவிடாமல் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அம்ஷன் குமார்.

மனுசங்கடா படத்தை உண்மைக்கு பக்கத்தில் மௌனமாக நிற்கும் சாட்சி என சொல்வது தான் சரியாக இருக்கும். அனைவரும் ஒருமுறை பார்த்தே தீரவேண்டிய படம் இது.