80 வயது பெரியவர் மு.ராமசாமி. வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கியவர். அவர் நீண்ட காலமாக கோமாவில் இருக்கிறார். ஆகவே அவரைக் கருணைக் கொலை செய்ய அவரது குடும்பத்தார் திட்டமிடுகின்றனர்.
சில கிராமங்களில் வயது முதிர்ந்த பெரியோர்களை தலைக்கூத்தல் என்ற பெயரில் கருணைக் கொலை செய்யும் வழக்கம் உண்டு. அந்த வழக்கப்படி இவரையும் கருணைக் கொலை செய்ய குடும்பத்தினர் துணிகின்றனர்.
இதை தெரிந்து கொண்ட மு.ராமசாமி யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து கிளம்புகிறார். எங்கு செல்வது என்று தெரியாமல் அலைகிறார்.
இச்சூழலில் கோவிலில் அனாதையாக இருக்கும் சிறுவன் நாக் விஷாலை சந்திக்கிறார். அவனுக்கு 8 வயது. வயதை மறந்து இருவருக்கும் இடையில் நட்பு உருவாகிறது.
அதே வேளையில் பெரியவர் மு.ராமசாமியைக் கொல்ல அவரது குடும்பத்தினர் தேடுகின்றனர். இந்நிலையில் பெரியவர் மு.ராமசாமியும், சிறுவன் நாக் விஷாலும் பிரிய நேரிடுகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
தன்னைக் கொல்லத் துணிந்த குடும்பத்தினரைப் பார்த்து அஞ்சும் போதும் சரி, சிறுவன் நாக் விஷாலின் குறும்புத்தனத்தைப் பார்த்து ரசிக்கும் போதும் சரி பெரியவர் மு.ராமசாமி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அவருடைய சிறு வயது தோழி வள்ளியை சந்திக்கும் போது ரசிகர்களை நெகிழ வைக்கிறார்.
சிறுவன் நாக் விஷாலும் மு.ராமசாமியுடன் போட்டி போட்டு நடித்து இருக்கிறான். தொடக்கத்தில் மு.ராமசாமியிடம் வில்லத்தனம் காட்டுபவன் போக போக அவருடன் ஒன்றுவது நம்மையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
தலைக்கூத்தல் என்ற துன்பியல் சம்பவத்தை மையக்கருவாக கொண்டாலும் படத்தின் இறுதிக்காட்சி வரை சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழ வைக்கிறார் இந்த கேடி என்கிற கருப்புதுரை.
இயக்குநர் மதுமிதாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இந்தப் படத்தின் மூலம் உறவுகளின் அவசியத்தையும், அன்பின் வலிமையையும் உணர்த்தியுள்ளார் இயக்குநர் மதுமிதா. இக்கால சமுதாயத்திற்கு தேவையான கருத்தை தனது படம் மூலம் உணர்த்தியுள்ளார் மதுமிதா. மிகப்பெரிய வாழ்த்துக்கள் அவருக்கு.
படத்தின் எந்த காட்சியிலும் போரடிக்காமல் சுவாரசியமான திரைக்கதை, வசனத்தால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு வசனம், திரைக்கதையில் பக்கபலமாக இருக்கிறார் சபரிவாசன் சண்முகம்.
மெய்யேந்திரன் கெம்புராஜின் ஒளிப்பதிவு கதை நடக்கும் கிராமங்களுக்கே நம்மை கூட்டி செல்கிறது. கார்த்திகேயமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையாலும் படத்துக்கு வலு சேர்க்கிறார்.
மொத்தத்தில் ‘கேடி என்கிற கருப்புதுரை’ அனைவர் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார்.