ஆதித்ய வர்மா – விமர்சனம்


நாயகன் துருவ் விக்ரம் மருத்துவ கல்லூரி மாணவர். அடிக்கடி கோபப்படும் இயல்புடையவர்.
நாயகி பனிதா துருவ் விக்ரம் படிக்கும் அதே கல்லூரியில் முதலமாண்டு மாணவியாக சேர்கிறார்.

நாயகி பனிதாவை பார்த்ததும் துருவ் விக்ரம் காதல் கொள்கிறார். ஆனால் பனிதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பிறகு ஒரு கட்டத்தில் பனிதாவும் காதலிக்கத் தொடங்குகிறார்.

இந்நிலையில் நாயகி பனிதாவின் வீட்டிற்கு இவர்கள் காதலிப்பது தெரிந்து விடுகிறது. சாதியைக் காரணம் காட்டி பனிதாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் கோபமடையும் நாயகன் துருவ் விக்ரம் நாயகி பனிதாவை அழைத்துவர அவரது வீட்டிற்கு செல்கிறார்.

தந்தை ஒருபுறம் காதலன் மறுபுறம் என இருதலைக் கொள்ளி எறும்பாக சிக்கி தவிக்கும் நாயகி பனிதாவிடம் முடிவெடுக்க 6 மணி நேரம் அவகாசம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார் நாயகன் துருவ் விக்ரம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாயகி பனிதா என்ன முடிவெடுத்தார்? தந்தையின் எதிர்ப்பை மீறி நாயகனைக் கரம் பிடித்தாரா? காதலில் ஜெயித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்திலேயே அசத்தியுள்ளார். தந்தை விக்ரமின் பெயரைக் காப்பாற்றியுள்ளார்.

ஆம் தெலுங்கில் மெஹாஹிட் ஆன அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது இந்த ஆதித்யா வர்மா திரைப்படம். துருவ் விக்ரம் அர்ஜூன் ரெட்டி கதாபாத்திரத்தை எப்படி தாங்குவார்? என்ற அனைவரது பயத்தையும் தனது அபார நடிப்பின் மூலம் போக்கியுள்ளார். தந்தைக்கும் பெருமை சேர்த்துள்ளார். துருவ் விக்ரமின் குரல் அவருக்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

நாயகி பனிதா சந்து, அழகு பதுமையாக நடித்துள்ளார். காதல், செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.

துருவ்வின் நெருங்கிய நண்பராக வரும் அன்புதாசன் குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய டைமிங் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். துருவுக்கு அவருக்கு இடையிலான நட்பு படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது,

மேலும் பிரியா ஆனந்த், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் ராஜா, துருவின் பாட்டியாக நடித்துள்ள லீலா சாம்சன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

அர்ஜூன் ரெட்டி படத்தில் எந்தவித மாறுதலும் இன்றி அப்படியே ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கிரிசையா.
ரதனின் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.

மொத்தத்தில் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் துருவ் விக்ரம் தனது வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.