துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள கேங்ஸ்டர் திரைப்படம் இது. கொத்தா என்கிற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வருகிறார் போலீஸ் அதிகாரி பிரசன்னா. அங்கே போதைப் பொருள் விற்பனை செய்தது கொண்டு ஊருக்கே தாதாவாக இருக்கிறார் சபீர் கல்லரக்கல் அவரை அடக்க வழி தெரியாமல் தவிக்கும் பிரசன்னாவுக்கு ஏற்கனவே சபீரின் நண்பனாக இருந்து பல வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டுச் சென்ற துல்கர் சல்மான் பற்றிய தகவல் தெரிய வருகிறது.
அவரை வரவழைத்து கபீரின் கொட்டத்தை அடக்க முடிவு செய்யும் பிரச்சனை உள்ளூரில் இருக்கும் துல்கர் சல்மானின் தங்கைக்கு பிரச்சனை என தந்தி அடித்து வரவழைக்கிறார். ஏற்கனவே சபீரின் செயல்பாடுகள் பிடிக்காமல் அவரது துரோகத்தால் ஊரைவிட்டு சென்ற துல்கர் இந்த முறை சபீரின் கொட்டத்தை அடக்கினாரா ? இவர்கள் இருவரையும் மோதவிடும் பிரசன்னாவில் யுக்தி பலித்ததா என்பது மீதிக்கதை.
கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மான் கன கச்சிதமாக பொருந்தி உள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு அவர் அறிமுகமான முதல் படமே கேங்ஸ்டர் படம் என்பதாலும் அதன் பின்னர் கிட்டத்தட்ட இதே போன்று மூன்று நான்கு படங்கள் நடித்து விட்டதாலும் இதில் தனது கதாபாத்திரத்தை அசால்டாக ஊதி தள்ளி உள்ளார். நண்பன் தனக்கு எதிராக திரும்புகிறான் என்றும் துரோகம் செய்யப் போகிறான் என்றும் தெரிந்த பிறகும் கூட நட்பே பெரிதாக எண்ணி மன்னிக்கும் துல்கரின் பெருந்தன்மையான கதாபாத்திரம் தான் நம் கண்களில் உயர்வாக தெரிகிறது. தேவையான அளவுக்கு ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் துல்கர் சல்மான்.
வில்லனாக நடித்துள்ள சபீரை எங்கேயோ பார்த்தது போன்று எல்லோருக்கும் தோன்றும். அவர் வேறு யாரும் அல்ல.. சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய சபீர் கல்லரக்கல் தான் இந்த படத்தில் இன்னும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறார். வில்லத்தனம் என்றாலும் அதிலும் சற்றே புதுமை காட்டியுள்ளார். குறிப்பாக ஒரு கண்ணில் அடிபட்ட வலியை தான் வரும் காட்சிகளில் எல்லாம் கவனமாக பிரதிபலித்துள்ளார்.
கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி. காதலனை நல்வழிக்குத் திருப்ப முயற்சித்து சூழ்நிலையால் அவனுக்கு எதிராக முடிவு எடுக்கும் கதாபாத்திரத்தை அழகாக செய்துள்ளார். இவருக்கு சமமாக படத்தில் வில்லியாக நடித்துள்ள நைலா உஷாவும் வில்லத்தனத்தில் சபாஷ் போட வைக்கிறார். குறிப்பாக அவரது தம்பி பற்றிய உண்மை துல்கர் மூலமாக தெரிய வரும்போது வில்லன் சபீருக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சி தான்.
இவர்களைத் தாண்டி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பிரசன்னா மற்றும் சுரேஷ்கோபியின் மகனான கோகுல் சுரேஷ், இன்னொரு தாதாவாக நடித்துள்ள செம்பான் வினோத் மூவருக்குமே செம முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் மூலமாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.
தனது மகன் ஒரு தாதாவாக வளர்வதற்கு தன்னை அறியாமலேயே காரணமாகி போன முன்னாள் தாதா கதாபாத்திரத்தில் ஷம்மி திலகன், மகன் இப்படி ரவுடியாகி விட்டானே என அவனை எதிரியாக பார்க்கும் அம்மா பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா, அப்பாவி தங்கையாக அனிகா சுரேந்திரன், முரட்டுக்குணம் கொண்ட விடலை பையனாக சரண் சக்தி என படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் கதையின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறார்கள்.
இதுவரை நாம் பார்த்திராத ஒரு தோற்றத்தில் கொத்த என்கிற ஒரு கேரள கிராமத்தை அழகியலோடு படம் பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை இந்த கேங்ஸ்டர் படத்திற்கான மதிப்பை படம் முழுவதும் நம்மிடம் தூக்கி பிடிக்கிறது.
மலையாள திரை உலகில் கமர்சியல் இயக்குனர்களில் முதல் இடத்தில் இருந்தவர் இயக்குனர் ஜோஷி. தொடர்ந்து மம்முட்டி, மோகன்லால் என முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே இயக்கி வந்த இவரது மகன் அபிலாஷ் ஜோஷி தான் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். தந்தையைப் போலவே கமர்சியல் ரூட்டை கையில் எடுத்துள்ள இவர் தந்தையைப் போல இப்போது ஆரம்பத்தில் எட்டடி பாய வில்லை என்றாலும் ஆறடியாவது பாய்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம் வரும் நாட்களில் தந்தையை மிஞ்சும் விதமாக இவரிடம் இருந்து படங்கள் வரும் என்பதை இந்த கிங் ஆப் கொத்த திரைப்படம் இப்போது சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து என்று சொல்லலாம்.