பிழைப்புக்காக வேலை தேடி கேரளா செல்லும் கோகுல், அப்புக்குட்டியின் இரும்புக்கடையில் தஞ்சமடைகிறார்.. அங்கே பக்கத்து வீட்டுப்பெண் நீனுவுடன் காதல் வயப்படுகிறார். அக்கா ப்ரியா மோகனின் திருமண விஷயமாக ஊருக்கு வரும் கோகுல், அக்காவுக்கு செல்போன் பரிசளிக்க, அந்த செல்போன் வெடித்த அக்கா காதுகேட்கும் திறனை இழக்கிறார், அதை தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட, அக்காவை அழைத்துக்கொண்டு கேரளாவுக்கே திரும்புகிறார் கோகுல்..
ஆனால் அக்காவுடன் கோகுலை பார்த்த நீனு அவரை தவறாக நினைத்து வெறுப்பாகிறார். இந்தநிலையில் திருட்டு வழக்கில் அக்கா-தம்பி இருவரையும் சிக்கவைத்து டார்ச்சர் செய்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர். அக்காவின் சிகிச்சைக்காக தேவைப்படும் ஒரு லட்ச ரூபாய் பணத்துக்காக நடனப்போட்டியில் கலந்துகொள்ள முயற்சிக்கும் கோகுலுக்கு அங்கேயும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த சோதனைகளை எல்லாம் தாண்டி அந்த பாசமலர்களின் வாழ்வில் வசந்தம் வீசியதா..? இல்லை மலர்கள் வாடிப்போனதா என்பது க்ளைமாக்ஸ்.
நாயகன் கோகுல், சாதாரண அப்பாவி இளைஞனாக ஹீரோயிசம் இல்லாமல் நடித்திருக்கிறார். அவரது அக்காவாக நடித்திருக்கும் பிரியா மோகன், முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் காது கேட்காமல், ஒரு சீரியசான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். அப்புகுட்டி கேரக்டரும் திருவின் நண்பர்கள் கேரக்டரும், அப்புகுட்டியின் நண்பராக வரும் மலையாளியின் கேரக்டரும் ஈர்க்கின்றன .
குறிப்பாக ஜென்டில்மேன் கேரக்டரில் வரும் மன்சூர் அலிகான் கிளாப்ஸ் பண்ண வைக்கிறார். உயிர்ப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிக்கி கண்ணம். வளவனின் இசையும் ஓரளவு ஈர்க்கவே செய்கிறது.பாசாங்கோ பூச்சோ இல்லாத மிக எளிமையான படமாக்கல் தான் இந்தப்படத்தின் பலம்
ஆனாலும் கதை திரைக்கதையில்தான் புதுமையோ இயல்போ பெரிதாக சுவாரஸ்யமோ இல்லை . கதாநாயகியை விட அக்காவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாம் பகுதியில், அதிக காட்சிகள் கொடுத்தது சரியான விஷயமே. எல்லா கதாபாத்திரங்களுக்கும் மிகப் பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கிய விதத்தில் கவர்கிறார் இயக்குனர் உதய் சங்கரன்.