களவு தொழிற்சாலை – விமர்சனம்


கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கடத்த முயற்சிக்கிறார் சர்வதேச சிலை கடத்தல்காரனான வம்சி கிருஷ்ணா. அதற்கு துணையாக பிள்ளையார் சிலை திருடனான அந்த ஊரை சேர்ந்த கதிரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு வெற்றிகரமாக சிலையையும் திருடுகிறார். இந்த திருட்டை கண்டுபிடித்து சிலையை மீட்கும் பொறுப்பு ஓர் இஸ்லாமிய அதிகாரியான மு.களஞ்சியத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. குற்றவாளிகளை அவர் கண்டுபிடித்தாரா என்பது மீதிப்படம்..

போலீஸ் அதிகாரியாக வரும் மு.களஞ்சியம் நடிப்பில் மிடுக்கு காட்டியுள்ளார்.. வம்சி கிருஷ்ணாவின் வில்லத்தனம் நாம் பார்த்தது தானே.. வழக்கம்போல ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகிறார். கதையுடன் ஒட்டாத கதிர், குஷியின் காதல் மனதிலும் ஒட்டவில்லை. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிலைக்கடத்தலை விறுவிறுப்பான திரைக்கதையில் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர்.

நீண்ட காலமாக மூடிக்கிடக்கும் கோவிலுக்கு அடியில் உள்ள பழங்கால சுரங்கப்பாதையை தத்ரூபமாக வடிவமைத்த வகையில் கலை இயக்குநர் முரளிராமின் உழைப்பு வெளிப்படுகிறது. ஒளிப்பதிவாளர் தியாகராஜன் திருவிழாக்காட்சிகள் மற்றும் சுரங்கப்பாதைக்குள் பயணிக்கும் காட்சிகளை அற்புதமாக படமாக்கியிருக்கிறார். ஷியாம் பெஞ்சமினின் பின்னனி இசை பரபரப்பான காட்சிகளில் கைகொடுத்திருக்கிறது.

“சிலைகள், இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை, இந்த நாட்டின் கலாச்சார அடையாளம்” என்பதை ஐந்து வேளையும் தொழுகை நடத்தி மதக்கோட்பாடுகளைத் தவறாமல் பின்பற்றும் இஸ்லாமிய அதிகாரி மூலமாக சொல்ல வைத்து மதநல்லிணக்கத்துக்கு வித்திட்டுள்ள இயக்குனர் கிருஷ்ணசாமியை அந்த ஒரு காரணத்திற்காகவே பாராட்டலாம்..