சென்னைக்கு வேலைதேடி வருபவர்களுக்கு சென்னை காட்டும் ஒவ்வொரு முகமும் வித்தியாசமானதுதான்.. அந்தவகையில் சென்னை என்கிற மாநகரத்தில் இரண்டு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் முன்பின் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத சிலரின் வாழ்க்கையை ஒரே நேர்கோட்டில் இணைத்து எப்படி புரட்டிப்போடுகிறது என்பதுதான் மொத்தப்படமும்..
திருச்சியில் இருந்து வேலைதேடி சென்னை வருகிறார் ஸ்ரீ. ஆனால் அடுத்தநாள் வேலைக்கு சேர இருந்த நேரத்தில் ஸ்ரீயின் சான்றிதழ்கள் தொலைந்து விடுகின்றன. அதை தேடும் முயற்சியில் ஈடுபடும் ஸ்ரீக்கு கிடைக்கும் அனுபவங்கள் படத்தின் ஒரு பகுதி..
இன்னொரு பக்கம் ரெஜினாவின் காதலை பெறுவதற்காக அவரது நிபந்தனையை ஏற்று வேலைக்கு முயற்சிக்கும் சந்தீப், அவரது காதலி ரெஜினாவை பயமுறுத்தும் ரவுடியை அட்டாக் பண்ணுகிறார். இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளும் இதில் எப்படி ஸ்ரீ உள்ளே வருகிறார் என்பதும் இன்னொரு பகுதி..
இவர்கள் தங்களை அறியாமலேயே சில சமூக விரோதிகளின் இலக்காக மாறி அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதையும் மகனின் சிகிச்சையை முன்னிட்டு சென்னைக்கு வந்து கால் டாக்சி ஓட்டும் சார்லியும் கடத்தப்பட்ட மகனை தேடும் சென்னை தாத்தா மதுசூதனனும் இவர்களது ஒருநாள் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
ஒரு படத்தின் கதையும் கதாபாத்திர வடிவமைப்பும் தான் அதில் நடிக்கும் நடிகர்களை ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிய செய்யும். அந்தவகையில் இதுவரை சாதாரண நடிகர்கள் என்கிற நிலையில் இருந்த வழக்கு எண் ஸ்ரீ, ‘யாருடா மகேஷ்’, சந்தீப் இருவருக்குமே இந்தப்படம் நிச்சயம் ஒரு சேஞ்ச் ஓவர்தான்..
பக்குவமான நடிப்பை ரெஜினாவும், பதட்டப்பட வைக்கும் நடிப்பை சார்லியும் இயல்பாக பிரதிபலித்திருக்கிறார்கள். இவர்கள் நால்வர் மட்டுமல்ல, படத்தில் நடித்துள்ள இன்னும் சில முக்கிய மற்றும் சின்னச்சின்ன கதாபாத்திரங்களுமே படத்தில் தங்களது முக்கியத்துவததை அழுத்தமாக பதியவைத்துள்ளார்கள்..
வில்லன்கள் கூட்டத்தில் மிகப்பெரிய தாதாவான மதுசூதனன், அவரது வலதுகை தீனா இருவரும் அலட்டாமல் மிரட்டுகிறார்கள்.. மிகப்பெரிய ரவுடியாவதை லட்சியமாக கொண்ட காமெடி ரவுடி முனீஷ்காந்த் இந்தப்படத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார்.
படத்தில் கதை, திரைக்கதையாக மட்டுமல்லாமல் டெக்னிக்கலாகவும் அசத்தியுள்ளார்கள்.. செல்வகுமாரின் கேமரா ஒரு த்ரில்லர் மூடை துவக்கத்தில் இருந்தே நம் மீது போர்த்தி விடுகிறது,, ஜாவேத் ரியாஸின் இசை த்ரில் காட்சிகளின் கனத்தை அப்படியே நம் மீது இறக்குகிறது..
இந்தப்படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை என்று சொல்கிறார்கள்.. ஆனால் நம்மால் நம்பத்தான் முடியவில்லை.. ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனரின் நேர்த்தியும், ஒரு த்ரில்லர் படத்திற்கான இலக்கணமும் இம்மி பிசகாமல் இந்தப்படத்தில் வெளிப்பட்டு இருக்கிறது..
குறிப்பாக லாஜிக் மீறாத அதேசமயம் ஒரே இடத்தில் கதையை வட்டமடிக்காமல் மற்ற கதாபாத்திரங்களின் வாயிலாக கதையை நகர்த்தி இருப்பதன் மூலம் படம் பார்ப்பவர்களின் மனதை பதறவைக்கிறார் அதிலும் பெண்கள் மீது ஆசிட் வீசுவேன் என சொல்லும் பொறுக்கிக்கு சந்தீப் தரும் தண்டனை ‘செம’.. நிஜத்தில் இப்படி செய்தால் அடுத்து ஆசிட் வீசலாம் என நினைப்பவர்களுக்கு நினைக்கும்போதே அல்லு தெறிக்க வைக்கும்..
தமிழ்சினிமாவுக்கு இன்னும் ஒரு திறமையான, நம்பிக்கையான இயக்குனரை தந்துள்ளது இந்த ‘மாநகரம்’.