கிராமத்தில் மரத்தடியிலோ அல்லது வீடு வீடாக சென்றோ முடி திருத்தும் வேலை பார்ப்பவர் யோகிபாபு.. தனக்கென சொந்தமாக ஒரு சலூன் அமைக்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைக்கிறார். பணம் திருட்டு போகாமல் இருக்க, அந்த ஊர் போஸ்டமாஸ்டர் ஷீலா ராஜ்குமாரின் ஆலோசனையின் பேரில் சேமிப்பு கணக்கு துவங்கி பணத்தை சேமிக்கிறார். எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாத, ஊரார் எல்லோராலும் இளிச்சவாயன் என அழைக்கப்படுகின்ற யோகிபாபுவுக்கு நெல்சன் மண்டேலா என பெயர் சூட்டி, ஆதார் எண், வாக்களர் அட்டை உள்ளிட்ட பலவற்றுக்கும் விண்ணப்பித்தும் தருகிறார் ஷீலா ராஜ்குமார்.
அந்தசமயத்தில் ஊரில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வருகிறது. ஊருக்குள் தொழிற்சாலை அமைக்க நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் கோடிகளை கமிஷனாக பெறலாம் என நினைக்கிறார் எம்.எல்.ஏ.. ஆனால் தலைவர் சங்கிலி முருகன் நேர்மையானவர் என்பதால், தெக்கூர், வடக்கூரை சேர்ந்த அவரது இரண்டு மனைவிகளின் வாரிசுகளையும் ஜாதி ரீதியாக தூண்டிவிட்டு தலைவர் பதவிக்கு போட்டியிட செய்கிறார்.
இரு தரப்பினரும் ஆளாளுக்கு பணம் செலவழித்து தங்களுக்கு சாதகமான வாக்களர்களை வளைக்கின்றனர். இருதரப்புக்கும் சரிசமமாக வாக்குகள் கிடைக்கும் என்கிற நிலையில் யாரவது ஒருவருக்கு ஒரு வாக்கு அதிகபடியாக கிடைத்தால் தான் வெற்றி என்கிற சூழ்நிலையில் தான், சரியாக யோகிபாபுவுக்கு வாக்காளர் அடையாள அட்டை தேடி வருகிறது.
இனி கேட்கவா வேண்டும்.. யோகிபாபுவை தங்கள் பக்கம் வளைப்பதற்காக, வருக்கு வசதிகளையும் பணத்தையும் அள்ளி வீசுகின்றனர்.. சொத்துக்களை எழுதி வைக்கவும் முன்வருகின்றனர். ஆரம்பத்தில் இதையெல்லாம் சந்தோஷமாக அனுபவிக்கும் யோகிபாபுவுக்கு போகப்போக யாருக்கு வாக்களிப்பது என்கிற மிகப்பெரிய சிக்கல் எழுகிறது. யாரோ ஒருவருக்கு வாக்களித்தால் இன்னொரு தரப்பினர் தன்னை கொல்வதற்கு தயாராக இருப்பதும் தெரிய வருகிறது. யோகிபாபு என்ன செய்தார்.? யோகிபாபுவை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது மீதிப்படம்.
காமெடி நடிகர்களாக வளர்ந்து உச்சம் தொடும் நடிகர்கள், அப்படியே குணச்சித்திர நடிப்புக்கும் மாறவேண்டிய சூழல் தானாக உருவாகும். ஒரு சிலருக்கே அது வாய்க்கும்.. அப்படி பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து யோகிபாபுவுக்கு மீண்டும் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கும் படம் தான் இந்த மண்டேலா.
படத்தின் இடைவேளை வரை வெகு அமைதியாக, தனது வழக்கமான ஒன்லைனர் காமெடி இல்லாத யோகிபாபுவை பார்ப்பதற்கே புதுசாக இருக்கிறது, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு மதிப்பு என்றும் ஒரு ஓட்டுக்கான மதிப்பு என்னவென்றும் அவரது கதாபாத்திரம் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
போஸ்ட் மாஸ்டர் கதாபாத்திரத்தில் ஷீலா ராஜ்குமார்.. மிக பொருத்தமான நடிப்பு.. சங்கிலி முருகன், வயதானாலும் இப்போதும் கிங்கு தான் என நிரூபிக்கிறார்.. குறிப்பாக அவர் இறந்துவிட்டார் என பதறிப்போய் வீடு தேடி வருபவர்களிடம் காட்டும் அலப்பறை செம லொள்ளு.. யோகிபாபுவுடன் கூடவே வரும் அந்த சிறுவன் ரொம்பவே பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறான். மற்றபடி இரண்டு போட்டியாளர்களாக நடித்திருப்பவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளாக நடித்திருப்பவர்கள், ஊர்க்காரர்கள் என அனைவருமே அந்த ஊர் மனிதர்களாகவே மாறி இருக்கிறார்கள்.
கிராமத்தை அதன் மண் மணம் மாறாமல் படமாக்கி இருக்கும், குறிப்பாக அந்த மரத்தடியை கூட ஒரு கதாபாத்திரமாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னாவின் ஒளிப்பதிவில் அவ்வளவு நேர்த்தி. பாரதி சங்கரின் பின்னணி இசை காட்சிகளின் மூடுகளுக்கு ஏற்ப நம்மை இணைந்து பயணிக்க செய்கிறது.
ஓட்டுக்கு பணம் வாங்கும்போது ஒரு ஊரின் வளர்ச்சி எப்படி இருந்தது. ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்று சொன்னபோது அதே ஊர் எப்படி மாறுகிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். நிச்சயமாக இந்தப்படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறுவார் என்றே சொல்லாம்.