நடிகையர் திலகம் ; விமர்சனம்


மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘நடிகையர் திலகம்’.. சாவித்திரி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தது முதல், அவரது சினிமா பயணத்தின் ஏற்ற இறக்கங்கள், இறுதி மூச்சுவரை யாரிடமும் கையேந்தாமல், ஒரு வள்ளலாகவே வாழ்ந்து மறைந்தது என இரண்டே முக்கால் மணி நேரத்தில் நம் மனம் முழுதும் ஆக்கிரமிக்கிறார் இந்த சாவித்திரி..

சாவித்திரி என்பவர் இப்படித்தான் வாழ்ந்தார் என அவரது வாழ்க்கையை தனது அபரிமிதமான இயல்பான நடிப்பால் வாழ்ந்து காட்டியிருக்கிறார் கதாநாயகி கீர்த்தி சுரேஷ். அறுபது எழுபதுகளில் சாவித்திரியின் ரசிகையாக இருந்தவர்கள் இந்தப்படத்தை பார்த்தால், இதை உண்மை என ஒப்புக்கொள்வார்கள்.

கதாநாயகனாக ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் பக்கா பொருத்தம். கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த இந்த கேரக்டரை அசால்ட்டாக பிரதிபலித்துள்ளார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாக எழுத துடிக்கும் பத்திரிகையாளராக சமந்தா, அவரது காதலராக விஜய் தேவரகொண்டா இருவரும் ஜாடிக்கேத்த மூடி.. சாவித்திரியின் கதையை எழுதி, அதனாலேயே சாவித்திரியின் துணிச்சலை சமந்தா பெறுவதாக காட்டியது சூப்பர்.

பிரகாஷ்ராஜ், மனோபாலா, பானுப்ரியா தவிர மற்றவர்கள் தெலுங்கு முகம் என்றாலும் கதையோட்டத்தில் நமக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. இன்னும் பல தெலுங்கு நடிகர்கள் சிறப்புத்தோற்றத்தில் வந்து தங்களது பங்களிப்பை தந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் டேனி சஞ்செஸ் லோபஸ், கலை இயக்குனருடன் கைகோர்த்துக்கொண்டு, அதேசமயம் இருவரும் போட்டிபோட்டு உழைத்திருக்கிறார்கள். அறுபதுகளின் காலகட்டத்திற்கே நம்மை அழைத்து சென்றுவிட்டார்கள்.

மிக்கி ஜே.மேயரின் இசையும் படத்திற்கு பக்கபலமாக பயணிக்கிறது.. இயக்குனர் நாக் அஸ்வின் எந்த சமரசமும் இல்லாமல் குறிப்பாக ஜெமினி கணேசனின் நெகடிவ் பக்கத்தை காட்டுவதிலும், சாவித்திரி அளவுக்கதிமாக மது அருந்தும் காட்சிகளிலும் உள்ளதை உள்ளபடியே படமாக்கியிருப்பது சிறப்பான விஷயம். அருமையான ஒரு நடிகையின் வாழ்க்கை பதிவை இவ்வளவு அழகாக படமாக எடுத்த நாக் அஸ்வினை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.