பேரன்பு – விமர்சனம்


வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்த மம்முட்டிக்கு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சாதனா என்கிற ஒரு பெண் குழந்தை… மனைவி ஒரு கட்டத்தில் குழந்தையை பராமரிக்க முடியாமல் வேறு நபருடன் தனது வாழ்க்கையை தேடி செல்கிறார்

வெளிநாட்டில் இருந்து திரும்பும் மம்முட்டி, குழந்தை விஷயத்தில் தனது வீட்டினரே மூன்றாம் மனிதர்களாக செயல்படுவதைப் பார்த்து மகளை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தனிமையான வீட்டிற்கு இடம் பெயர்கிறார்

பூப்பெய்தும் பருவத்திலுள்ள தனது மகளை ஒரு தந்தையாக, ஆணாக இருந்துகொண்டு கவனிப்பதில் இருக்கும் சிரமங்களை வெகுசீக்கிரம் உணர்கிறார் மம்முட்டி. ஆரம்பத்தில் தந்தையுடன் ஓட மறுத்தாலும், ஒரு கட்டத்தில் தந்தை மீதான அன்பை புரிந்து கொண்டு நெருங்கி வருகிறாள் சிறுமி சாதனா.

எங்கிருந்தோ வந்த உறவாக வீட்டு வேலைக்கு சேர்ந்த அஞ்சலி குழந்தையை கவனித்துக் கொண்டு, மம்முட்டிக்கும் சந்தோசம் தர, மன பாரம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ தூங்குகிறார் மம்முட்டி ஆனால் விதி அவரது மகிழ்ச்சியின் தலையில் துரோகம் எனும் சம்மட்டியால் ஓங்கி அடிக்கிறது.

இந்த துரோகத்தால் வீட்டை இழந்து, வலியை தாங்க முடியாமல் ஊரை விட்டு நகரத்தின் அதிர்வுகளுக்கு இடையே குடிபெயர்கிறார் மம்முட்டி. இந்த சூழல் அந்த மாற்றுத்திறனாளி குழந்தையிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை போகப்போக புரிந்து கொள்ளும் மம்முட்டிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் அதைத்தொடர்ந்து அயர்ச்சியும் ஏற்படுகிறது

இனி இந்த குழந்தையை நம்மால் கவனித்துக் கொள்ள முடியாது என்கிற நிலைக்கு வரும் மம்முட்டி மனதை கல்லாக்கிக்கொண்டு ஒரு முடிவு எடுக்கிறார்.. அது என்ன முடிவு..? அந்த முடிவை அவரால் செயல்படுத்த முடிந்ததா..? அவரை அப்படி முடிவு எடுக்கத் தூண்டும் அளவுக்கு சுற்றுப்புறச் சூழல் எந்த அளவுக்கு கொடூரமாக இருந்தது என்பதை மீதி படம் சொல்கிறது

மன வளர்ச்சி அற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆகியோருடன் தொடர்பில்லாத நம்மில் பலர், அவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பார்த்து விட்டு ஜஸ்ட் லைக் தட் ஒரு பரிதாபத்துடன் கடந்து விடுவோம் ஆனால் எதார்த்தத்தில் அவர்களது வலி மிகுந்த தினசரி வாழ்க்கையை பற்றி நமக்கு தெரிந்ததே இல்லை இந்தப் பேரன்பு படம் அதை பொட்டில் அடித்த மாதிரி சொல்லி நம்மை உறைய வைக்கிறது

மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தையின் தந்தை, அந்த குழந்தையை பராமரிக்க எப்படி எல்லாம் சிரமப்படுவான் என்பதை மம்முட்டி தனது இயல்பான நடிப்பால் உயிர்கொடுத்து வெளிப்படுத்தி உள்ளார்

நம் எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்கிற உணர்வை காட்சிக்கு காட்சி அவரது கதாபாத்திரம், படம் முழுக்க சங்கடங்களும் துயரங்களுமாக பிரதிபலித்து கொண்டே இருக்கின்றன ஒரு கட்டத்தில் நாமே அப்படி ஒரு தந்தையாக மாறிவிட்ட உணர்வை நமக்குள் கடத்தி விடுகிறார் மம்முட்டி.

கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூணாக தங்க மீன்கள் சாதனா.. இவரது நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனும் அளவிற்கு அந்த கேரக்டரை அவ்வளவு இயல்பாக செய்துள்ளார் சாதனா..

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை ஆனால் அதை தனது அபாரமான நடிப்பால் சாதித்து காட்டியுள்ளார் வருங்காலத்தில் இவர் மிகச்சிறந்த நடிகையாக வலம் வருவார்

கொஞ்ச நேரமே வந்தாலும் சூழ்நிலை கைதியாக தனது கேரக்டரை தனது நடிப்பால் நியாயப்படுத்தியுள்ளார் நாயகி அஞ்சலி. புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் திருநங்கை அஞ்சலி அமீர், தனது அழகான நடிப்பால், வெள்ளந்தியான உருவத்தால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்

கதையில் முக்கியமான திருப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ள கதாபாத்திரங்களாக பாவெல் நவகீதன், சண்முகசுந்தரம் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர், தாங்கள் வந்து செல்லும் அந்த கொஞ்ச நேரத்திலும் கதையை தங்கள் தோளில் அழகாக தாங்கி நகர்த்திச் செல்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பல காட்சிகளில் நம் மனதை என்னவோ செய்கிறது. தேனி ஈஸ்வரின் கேமரா தனிமை, கூட்டம் இந்த இரண்டின் கோர முகங்களையும் அந்த இரண்டு தளங்களில் இருந்துகொண்டே அழகாக பதிவு செய்திருக்கிறது.

இயற்கையின் கண்ணோட்டத்தில் இந்த கதையை மிக அழகாக நகர்த்திக் செல்லும் இயக்குனர் ராம் கதையின் மொத்த பாரத்தையும் ஆரம்பத்திலேயே நம் தலைமீது தூக்கி வைத்து, நம் ஒவ்வொருவரையும் சிறுமியின் தந்தை அமுதவனாகவே உணரச் செய்து விடுகிறார்.

இயற்கை எவ்வளவு அற்புதமானது, கொடூரமானது, அழகானது, புதிரானது, அன்பானது என ஒரு மனிதனின் சூழலுக்கேற்ப இயற்கையின் கண்ணோட்டத்தை இந்தக் கதையுடன் இணைத்து அவற்றை ஒரு அழகிய மாலையாக கோர்த்துள்ளார்

இந்த படம் மேலை நாடுகளில் பல விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றதற்கு காரணம் இதில் சொல்லப்பட்டுள்ள இயற்கை சார்ந்த அந்த விஷயம்தான்.

ஒரு தந்தை என்பவனுக்கு மாற்றுத்திறனாளி பெண் குழந்தையை அதிலும் வயதுக்கு வந்த பெண்ணை வளர்த்து பராமரிப்பதில் உள்ள சங்கடங்களை இதுவரை எந்த படமும் இப்படி உண்மைக்கு பக்கத்தில் நின்று சொன்னது இல்லை.

நம்மைவிட பிரச்சனை அதிகமாக உள்ளோரை பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்கிற உண்மை நமக்கு தெரியவரும். இந்தப் படத்தை பார்க்கும் பலருக்கும், இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயத்தை பார்க்கும்போது தங்களது பிரச்சினைகள் எல்லாம் வெறும் தூசு தோன்றினால் அதுவே இந்த படத்தின் உண்மையான வெற்றி