சர்வம் தாள மயம் – விமர்சனம்


பிரபல மிருதங்க வித்வான் நெடுமுடி வேணு.. மிருதங்கம் செய்யும் தொழில் செய்து வரும் குமரவேல் மகன் ஜிவி பிரகாஷ். ஒருமுறை நெடுமுடி வேணு.. வாசிக்கும் சபாவிற்கே மிருதங்கத்தை கொண்டுசென்று கொடுக்கும் வாய்ப்பு ஜி.வி.பிரகாஷுக்கு கிடைக்கிறது அப்போதுதான் தனக்குள்ளும் இசை ஆர்வம் புதைந்து கிடப்பதை உணர்கிறார் ஜி.வி.பிரகாஷ் அதைத்தொடர்ந்து பல முயற்சிகள் செய்து ஒருவழியாக நெடுமுடி வேணுவின் சீடராக சேர்கிறார்.

ஆனால் அவரது உதவியாளராக இருக்கும் வினீத்திற்கு இது பிடிக்காததால் ஒரு கட்டத்தில் நெடுமுடி வேணுவை விட்டு விலகி, தனது தங்கை டிடி நடத்திவரும் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக சேர்கிறார் வினீத். இங்கே நடைபெறும் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் நெடுமுடி வேணுவுக்கும் அவரது சீடர் ஜி.வி.பிரகாஷுக்கும் பாடம் புகட்ட நினைக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்

காதல் கமர்சியல் என்கிற அம்சங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இசை.. இசை.. இசை.. முழுக்க முழுக்க இசையை மட்டுமே மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த படம்.. இசைக்கலைஞராக நடிப்பதற்கு ஜி.வி. பிரகாஷுக்கு சொல்லித் தரவேண்டுமா என்ன படம் முழுவதும் ஆர்வம், உத்வேகம், சோகம், விரக்தி, வேகம் என கலவையான உணர்வுகளை பிரதிபலித்து அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்

படத்தின் இன்னொரு ஹீரோ கதாபாத்திரம் என்று சொல்லும் அளவிற்கு அவரது குருவாக வரும் நெடுமுடி வேணு, படம் முழுவதும் தனது அற்புதமான நடிப்பால் நம்மை வசியப்படுத்துகிறார்.

நாயகி அபர்ணா பாலமுரளிக்கு அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் நாயகனுக்கு உத்வேகம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தும் வேலையை செவ்வனே செய்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு சாக்லேட் பாயாக பார்த்து வந்த சாக்லேட் பாயா இது என தனது வித்தியாசமான தோற்றம் மற்றும் துடுக்குத்தனமான நடிப்பால் நம்மை கேட்க வைத்துள்ளார் நடிகர் வினீத். ஒரு வித்வானிடம் உதவியாளராகவே காலம் கழிக்கும் ஒரு இசைக்கலைஞனின் கோபத்தை மிகச்சரியாக அவரது கதாபாத்திரம் வெளிப்படுத்தியுள்ளது.

வினீத்தின் தங்கையாக வரும் திவ்யதர்ஷினி என்கிற டிடிக்கு அவரது துறை சார்ந்த கேரக்டர் என்பதால் பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் தந்தையாக வரும் குமரவேல் மிருதங்கம் செய்யும் தொழில் கலைஞராக ஒரு வாழ்க்கையையே வாழ்ந்துள்ளார்.

கர்நாடக இசை சம்பந்தப்பட்ட, குறிப்பாக மிருதங்கம் சம்பந்தப்பட்ட கதை என்பதை உணர்ந்து தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் அதற்கான மூடுக்குள் ரசிகனை அழகாக இழுத்து வந்து அமர வைத்து இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

ஜிவி பிரகாஷின் இசைப்பயணத்தில் வடக்கத்திய மாநிலங்களுக்கு நம்மையும் உடன் அழைத்துச் சென்று கண்குளிர செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்,

நீண்ட நாட்கள் கழித்து திரையுலகில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ள ராஜீவ் மேனன், ரசிக்கும்படியான ஒரு தரமான படத்தின் மூலம் ரசிகர்களை வசீகரித்துள்ளார் என்றே சொல்லலாம்.

காலத்திற்கு ஏற்ப இசை என்பது மாறுபாடு அடைந்து வருகிறது என்பதை பல மூத்த இசை கலைஞர்கள் இன்னும் உணராமல் பிடிவாதம் காட்டுகின்றனர். அதேசமயம் இளைய தலைமுறையினர் எப்படி கர்நாடக சங்கீதத்தையும் இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக புது வடிவத்தில் கடத்துகின்றனர் என்பதையும் மொத்த படத்திலும் மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன்.