தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்


சிபிஐ ரெய்டு அடிக்கடி ரெய்டு நடத்துகிறார்களே..? அவர்கள் கைப்பற்றும் பணமெல்லாம் அரசாங்கத்தின் கஜானாவுக்கு முறையாக போய் சேருகிறதா…?

பணம் வாங்கிக்கொண்டு பணிக்கு ஆட்களை நியமிப்பதால் தானே லஞ்சம் ஊழல் பெருகுகிறது. லஞ்சத்தில் திளைப்பவர்களையே மொத்தமாக ஒரு தொகையை கொடுத்து இனி லஞ்சமே வாங்காமல் செய்துவிட்டால்..?

அதேபோல நியாயமாக யாருக்கு வேலை கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கே, லஞ்சம் வாங்க கூடாது என சொல்லி யாரோ ஒரு புண்ணியவான் தானே பணம் கொடுத்து வேலையை வாங்கி கொடுத்துவிட்டால்..?

இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என ‘தானா சேர்ந்த கூட்டம்’ மூலமாக கருத்து சொல்லாமல் கலகலப்பாக பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். படத்தின் கதை எண்பதுகளின் காலகட்டத்தில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரி ஆகவேண்டும் என்கிற சூர்யாவின் லட்சியம் சிபிஐ உயர் அதிகாரியான சுரேஷ் மேனனின், ஈகோவால் அவரது கையைவிட்டு போகிறது. அதிகாரத்தில் இருந்துகொண்டு தான் சாதிக்க நினைத்ததை, அதிகாரம் இல்லாமலேயே சாதிக்க முடிவுசெய்து ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் சூர்யா.

ஊழல் பணம் சேர்த்தவர்களிடம் போலி ரெய்டுகள் நடத்தி சிபிஐக்கு தலைவலி கொடுக்கிறார். போலி ரெய்டு நடத்துவது யாரென கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியாக கார்த்திக் நியமிக்கப்பட, சூர்யாவை பொறிவைத்து பிடிக்க வியூகம் வகுக்கிறார் கார்த்திக்.

அவரது வியூகத்தில் சூர்யா சிக்கினாரா..? சூர்யா சிபிஐ ஆபீசர் ஆகமுடியாதது மட்டும் தான் அவர் நடத்தும் போலி ரெய்டுகளுக்கு காரணமா..? இப்படி போலி ரெய்டுகள் மூலம் சூர்யா கொண்டுவர விரும்பிய மாற்றம் என்ன..? இவைகளுக்கு விடைசொல்கிறது மீதிப்படம்.

ஒரு சராசரி இளைஞன் கேரக்டர் தான் சூர்யா என்றாலும் அதில் இன்னொரு துரைசிங்கத்தை நாம் பார்க்க முடிகிறது. காதல், சென்டிமென்ட் காட்சிகளை விட சமூக கோபத்தை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார் சூர்யா. க்ளைமாக்சில் நூற்றுக்கணக்கான போலீஸார் மத்தியில் சிக்கிக்கொண்ட சமயத்தில் அவர் அதை சமாளிக்கும் விதம் நம்மால் யூகிக்க முடியாத ஒன்று.

குறைந்த அளவு காட்சிகளில் வந்தாலும் அட, நீயும் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா என சொல்லும் விதமாக கீர்த்தி சுரேஷின் கேரக்டர் அவரது முந்தைய படங்களில் இருந்து நிறையவே மாறுபட்டிருக்கிறது. கதாநாயகியை விட முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்.. சிபிஐ அதிகாரியாக அவர் ரெய்டு நடத்தும் காட்சிகளில் ரம்யா.. ரம்யாதான் என சொல்ல வைக்கிறார்.

நீண்டநாளுக்கு பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ள நவரச நாயகன் கார்த்திக்கின் அலட்டல் இல்லாத நடிப்பை பார்க்கும்போது இன்றும் அவரது இடம் வெற்றிடமாகவே இருப்பதை உணரமுடிகிறது. மிடுக்கான வில்லத்தனம் காட்டும் அதிகாரியாக சோடைபோகாத நடிப்பை வழங்கியிருக்கும் சுரேஷ் மேனனை தேடி இனி நிறைய வாய்ப்புகள் குவியும்.

அஞ்சு நிமிடம் வந்தாலும் கூட அசத்தல் ஆனந்தராஜ். யப்பா.. ரொம்பநாள் கழித்து நந்தாவின் வேறு ஒரு முகத்தை, பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.. நீண்டநாளைக்குப்பிறகு நகைச்சுவை நடிகர் செந்தில் நமக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். அவரது பெட்ரோமாக்ஸ் லைட், வாழைப்பழ காமெடிகளை போகிற போக்கில் டச் பண்ணியிருப்பதும் நல்ல ஐடியா.

பாத்ரூம் காமெடியில் தம்பிராமையாவும் ஆந்திரா ரெய்டில் சத்யன் காட்டும் பந்தாவும் நம்மை அறியாமல் சிரிக்க வைக்க உத்தரவாதம் தருகின்றன.சில காட்சிகளில் மட்டுமே வரும் யோகிபாபு, கலையரசன் ஆகியோரும் நியாயமான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்தாலும் வழக்கமான தனது நையாண்டியால் ஸ்கோர் பண்ணுகிறார் ஆர்ஜே பாலாஜி.

அனிருத் இசையில் ‘சொடக்கு மேல” பாடலுக்கு தியேட்டரே ஆடாத குறைதான். பின்னணி இசையிலும் நம்மை திருப்திப்படுத்துகிறார் மனிதர். எண்பதுகளின் லுக்கை கொண்டுவர அற்புதமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

கடந்த படத்தைப்போல ஜாலியாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல கருத்தையும் அழகாக இணைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இத்தனை நட்சத்திரங்களை வைத்து அலுப்பு தட்டாமல் ஒரு படத்தை கொடுப்பது ஒரு சவால் தான்.. ஆனால் தானே ‘சேர்த்த’ அந்த கூட்டத்தை வைத்து அதை சாதித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இடைவேளைக்குப்பின் கார்த்தி-சூர்யாவின் ஆடுபுலி ஆட்டம் சுவாரஸ்யம். ஆனால் தான் ரெய்டில் சம்பாதித்த பணத்தை நல்ல விஷயங்களுக்காக சூர்யா பயன்படுத்துவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டியிருந்தால், க்ளைமாக்ஸ் காட்சியை நம் இன்னும் எளிதில் உள்வாங்கி இருக்கமுடியும். இப்போது நடக்கும் அரசியல் களேபரங்களை அப்போதே யூகமாக பேசிக்கொள்வது போல வைத்திருப்பதும் புது யுக்தி தான்.

மொத்தத்தில் இந்தப்படத்திற்கு ‘தானாகவே கூடம் சேரும்’ என்பதில் சந்தேகமில்லை..