படத்தின் தலைப்பே கதை என்ன என்பதை சொல்லிவிடுகிறது. ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் கலந்துகொண்டு 32 சர்வதேச விருதுகளையும் இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்ற இந்த படம் அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது பார்க்கலாம்.
சினிமாவில் இயக்குனராக போராடும் சந்தோஷ் நம்பிராஜன், மனைவி ஷீலா ராஜ்குமார், மகன் தரும் பாலா என அளவான குடும்பம். அதற்கேற்ப வீடும் அளவான வீடுதான்.. வீட்டு உரிமையாளர் ஆதிரா என்ன காரணத்தினாலோ இவர்களை ஒரு மாத கால கெடு கொடுத்து வீட்டை காலி பண்ண சொல்கிறார்.
சென்னை போன்ற நகரங்களில் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குடும்பம் அவ்வளவு சுலபமாக இன்னொரு வீட்டை பெற்று விட முடிகிறதா..? ஒரு இல்லத்தரசியின் சாதாரண ஆசையான ஒரு நல்ல வாடகை வீடு இந்த படத்தில் நாயகி ஷீலா ராஜ்குமாருக்கு கிடைக்கிறதா என்பதுதான் மீதிக்கதை.. இதை எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதில்தான் விருதுக்கான அத்தனை அம்சங்களும் அடங்கி இருக்கின்றன
கதையின் மாந்தர்கள் அனைவரும் எதார்த்தமான மனிதர்களாகவே உலா வருவது அந்தக்கதையில் நாமே ஒரு கதாபாத்திரமாக மாறி விட்ட உணர்வை தருகிறது. கணவன் மனைவிக்குள் உள்ள அன்னியோனியம், ஊடல், கூடல் பொருளாதார சங்கடங்கள் என எதையும் பாக்கி வைக்காமல் வெளிப்படுத்தும் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார் நடிப்பு பற்றி நாம் பாராட்டவே தேவை இல்லை.. அந்த அளவுக்கு நம்மில் யாரோ ஒருவர் தான் அந்த கதாபாத்திரம் என நினைக்க வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக இவர்களின் மகனாக நடித்துள்ள அந்த சிறுவன் தருண் பாலா நிச்சயம் தேசிய விருதுக்கு தகுதியானவர் தான். சின்னச்சின்ன உணர்வுகளைக் கூட மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் ஆதிரா கதாபாத்திரத்தை சென்னையில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஏதோ ஒரு வீட்டில் தவறாமல் பார்க்க முடியும். இவர்கள் தவிர மற்ற அனைவருமே மிக சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்
விருது படமா இதில் என்ன இருக்கப் போகிறது என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது அந்த அளவுக்கு கமர்சியலாகவும் உருவாக்கி இருக்கும் இந்தப் படம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.