கண்ணே கலைமானே – விமர்சனம்


தர்மதுரை என்கிற வெற்றிப் படத்திற்குப் பின்பு இயக்குனர் சீனு ராமசாமி கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியாகியுள்ளது

விவசாய படிப்பு படித்து விட்டு தனது சொந்த கிராமத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு, மற்ற விவசாயிகளுக்கு உதவும் வேலையையும் செய்து வரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை தான் உதயநிதி. பாட்டி வடிவுக்கரசி, அப்பா பூ ராமு ஆகியோரின் சொல்லை தட்டாத பிள்ளையாக இருக்கும் உதயநிதிக்கு, அந்த ஊர் வங்கியின் மேனேஜராக வரும் தமன்னாவின் கண்டிப்பும் அதைத் தொடர்ந்த கனிவும் பிடித்துப்போகிறது.

ஒருகட்டத்தில் இருவரும் காதலை பரிமாறிக் கொள்ள, திருமணத்திற்கு உதயநிதி குடும்பத்தினரிடமிருந்து ரெட் சிக்னல் கிடைக்கிறது ஆனால் உதயநிதியின் பிடிவாதம் இவர்கள் காதலை திருமணத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. பின்னர் தந்தையின் ஆலோசனையின் பேரில் தனிக்குடித்தனமும் போகிறார்கள்.

ஆனால் அதன்பின் உதயநிதியின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்து வாழ்க்கையே திசை மாறுகிறது.. உண்மை என்னவென்று தெரியவரும்போது உதயநிதியின் குடும்பம் பதறி போகிறது.. அப்படி இவர்கள் இருவர் வாழ்வில் வீசிய புயல் என்ன என்பது கிளைமாக்ஸ்

சீனு ராமசாமியின் படங்கள் உணர்வுப்பூர்வமானவை… மனிதர்களுக்குள் அன்பை, நட்பை, மனிதாபிமானத்தை கடத்துபவை,, அப்படிப்பட்ட கதைக்குள் தன்னையும் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே புகுத்திக் கொண்டுள்ளார் நடிகர் உதயநிதி. இதற்கு முன் பார்த்த படங்களில் இருந்து இதில் சற்றே மாறுபட்ட உதயநிதியையும் பார்க்க முடிகிறது. அதேசமயம் காட்சியமைப்பும் வசனங்களும் அவருக்காகவே மாற்றப்பட்டு உள்ளதோ என பல இடங்களில் சந்தேகம் ஏற்படுகிறது

தமன்னாவை தமிழ் சினிமாவில் சரியாகப் பயன்படுத்துபவர்களில் சீனுராமசாமியும் ஒருவர் தர்மதுரை படத்தில் தனது தேர்வை நியாயம் என நிரூபித்ததை போல மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார் ஆனால் அவரது கேரக்டர் தைரியமாக இருக்கும் அளவிற்கு சற்றே குழப்பவாதி போலவும் உருவகப்படுத்தி இருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

உதயநிதியின் பள்ளி தோழியாக வரும் வசுந்தரா மற்றும் அவரது கணவரின் இயல்பு மீறாத கதாபாத்திர சித்தரிப்பும் நடிப்பும் அருமை.. நீண்ட நாளைக்கு பிறகு வடிவுக்கரசியை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியே. உதயநிதியின் தந்தையாக பூ ராமு வழக்கம்போல மகனின் நல்வாழ்விற்காகவே இயங்கும் தந்தை கதாபாத்திரம்.. செவ்வனே செய்திருக்கிறார்..

உதயநிதியின் நண்பர்கள் குழாமில் தீப்பெட்டி கணேசன் மட்டுமே அவ்வப்போது ஒன்லைன் காமெடியால் சிரிக்கவைக்கிறார்.. ஆனால் அது மட்டுமே ரசிகர்களுக்கு போதாதே.. கந்துவட்டி பைனான்சியர் ஆக வரும் நாகேந்திரன் கதாபாத்திரம் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு யுவன் சங்கர் ராஜாவின் இசை இரண்டிலுமே மண்வாசனை கமழ்கிறது.

விவசாயிகளின் பிரச்சினைகள், விவசாயத்திற்கான முக்கியத்துவம், இயற்கை உரம் பற்றி எல்லாம் இந்த படத்தில் ஆங்காங்கே காட்சிகளினூடாக இயற்கை உரம் போல தூவி இருக்கும் சீனுராமசாமியை ஒரு சமூக ஆர்வலராக நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. ஆனால் அதை உதயநிதியின் படத்தில் வைத்திருப்பதுதான் சற்றே இடிக்கிறது

உதயநிதி தனக்கான பிரச்சனையை யாரிடமும் சொல்லாமல் மறைப்பதற்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.. பிரச்சனை என்று வந்த பின்பு தமன்னாவின் கதாபாத்திரத்தை சராசரி பெண்ணாக மாற்றி இருப்பதையும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.. குடும்ப உறவுகள் இணைந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த படம் வலியுறுத்துகிறது.. நல்ல படம் என்றாலும் தர்மதுரை படம் ஏற்படுத்திய அளவிற்கு ஒரு தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை