சென்னை திருவல்லிக்கேணி D1 போலீஸ் ஸ்டேஷனில் எழுதும் ஒரு கிரைம் சீனால், தனது கஸ்டடியில் இருக்கும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் அப்பாவி மாணவர் ஹரிகிருஷ்ணன் வசமாக மாட்டிக்கொள்ள , அதனையடுத்து அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற அவரது போராட்டமே ரைட்டர் படத்தின் கதை.
திருவல்லிக்கேணியின் குறுகலான தெருக்கள், மெரினா கடற்கரை, மேன்சன்கள் , மொட்டைமாடி வியூவில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் என்று படக்காட்சிகள் முழுவதையும் அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் பிரதீப்.
கோவிந்தாவின் இசை, ராஜாவின் கலை இயக்கம், எடிட்டர் மணி என்று அத்தனை பேரின் தொழில் நுட்ப பங்களிப்பும் மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் படங்களில் அவர் எப்பொழுதுமே தனது பங்கை சிறப்பாக செய்துவிடுவார் என்றாலும் இந்தப்படத்தில் இரண்டு பொண்டாட்டிக்காரனாக, வயதான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் அப்பாவாக, மேலதிகரிகாளின் நிர்பந்தத்திற்கு நடுவிலும் கீழ்மட்டக்காவலர்களுக்கு சங்கம் வேண்டும் என்கிற உரிமைப்போராட்டத்தை முன்னெடுப்பவராக என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாதி முழுவதும் தனது யதார்த்தமான நடிப்பால் வசீகரித்திருப்பதுடன், தனது தம்பியை காப்பாற்ற போராடும் உணர்ச்சி மிகுந்த இரண்டாம் பகுதி போராட்டத்தில் கண்கலங்க வைத்தும் விடுகிறார் இயக்குநர் சுப்ரமணிய சிவா.
திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சமுத்திரக்கனியின் அடுத்த வாரிசாக வரும் திலீபன், ஆக்ரோஷமான உயரதிகாரியாக ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் போஸ் வெங்கட், சென்னை டி 1 இல் இன்ஸ்பெக்டராக வரும் கவிதாபாரதி, இணை ஆணயராக வரும் கவின் ஜெய் பாபு , ராஜாவாக நடிப்பவர் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பெருமாளை பேருமாள் என்று அழைக்கும் இந்தி பேசும் வட இந்திய காவல்துறை அதிகாரியாக வரும் கவின் ஜெய் பாபுவாகட்டும், ஒவ்வொரு முறையும் தனது தொப்பையை தூக்கிக்கொண்டு அவருக்கு சல்யூட் வைக்கும் கவிதாபாரதியாகட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வழக்குரைஞராக வரும் ஜி,எம். சுந்தரையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. படத்தின் மையப்புள்ளியாக வரும் இனியாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனியின் இருமனைவியராக வரும் லிசி, மகேஸ்வரியும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்,
சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் சரியா ? தவறா என்பதை தாண்டி ஒரு முழுமையான படைப்பாக ரைட்டரை கையாண்டிருக்கும் அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கபிற்கு பாராட்டுகள்.
பா.ரஞ்சித்தின் வழக்கமான குறியீடுகளுக்கு இந்தப்படமும் தப்பவில்லை. பாதிக்கப்பட்டவன் பூராம் தலித் கிறுத்துவர்களாகவும் பாதிப்பு ஏற்படுத்துறவன் பூராம் கடவுள் நம்பிக்கை உள்ள மற்றும் உயர்சாதி என்று சொல்லப்படும் இந்துக்களாகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அப்போ, நல்லவராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அவருக்கு கவனமாக எந்தசாயலும் இல்லாமல், மீசையை மழித்துவிட்டு ஒரு கிரிப்டோ சாயலில் இருந்து தொலைக்கட்டும் என்று கவனமாக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
சிறுபான்மையினரை முன்னிலை படுத்தி பெரும்பான்மையானவர்களை சிறுமைப்படுத்தி படம் எடுத்து அதை பெரும்பான்மையானவர்களைக் கொண்டே ஜெயிக்க வைக்கும் உக்தியை இந்த படத்திலும் செய்திருக்கிறார் ரஞ்சித்.
மொத்தத்தில் ரைட்டர் விறுவிறுப்பு.