அரிய இரத்த வகை கொண்டவர் சுவாதி.. அதே காரணத்துக்காக ஒரு பிரபல தனியார் மருத்துவமனை முதலாளி குருசோமசுந்தரம், சுவாதியை தீர்த்துக்கட்டி கோடிகளில் பணம் சம்பாதிக்கிறார். வெகுண்டு எழும் சுவாதியின் காதலன் கிருஷ்ணா எதிரியை வீழ்த்த கிளம்புகிறார்.. இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் இந்த கேஸில் விசாரணையை துவங்குகிறார்.. இவர்கள் இருவராலும் எதிரியை நெருங்க முடிந்ததா என்பதுதான் மீதிக்கதை..
கல்லூரி வாலிபராக, காதலராக, புரட்சி இளைஞர் கதிராக கிருஷ்ணா செம கச்சிதம். காதல் காட்சிகளில் கண்களில் ரொமான்ஸையும், ஆக்ஷன் காட்சிகளில் உடம்பில் கூடுதல் வலுவையும் காட்டி மிரட்டியிருக்கிறார் கிருஷ்ணா.
ஒரு இடைவேளைக்குப் பிறகு தெற்றுப்பல் சிரிப்போடு வளைய வந்திருருகிறார் ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி. தன் சேவை மனப்பான்மையால் கிருஷ்ணாவுடன் சேர்த்து நம்மையும் வசீகரித்து, எதிர்பாரதவிதமாக பரிதாபகரமான முடிவுக்கு ஆளாகும்போது ‘உச்’ கொட்ட வைக்கிறார். விசாரணை அதிகாரியாக படம் முழுக்க, தனக்கே உரிய மேனரிசங்களோடு வருகிறார் பிரகாஷ் ராஜ் .
வில்லனாக வரும் ‘ஜோக்கர்” நாயகர் குருசோமசுந்தரத்திற்கு களம் வித்தியாசமானது என்றாலும் அவரை ஹைடெக் வில்லனாக நிலைநிறுத்த சற்று தயக்கம் ஏற்படவே செய்கிறது. அவரின் தந்தையாக வரும் ராதாரவியின் நடிப்பு வழக்கம்போல மிடுக்கு.. கிருஷ்ணாவின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர், காமெடி போலீஸ் சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் “என்னுள்ளே ஏன் சலனம்…”, “நான் இந்த காற்றில்..”, “எந்தன் இறுதி மூச்சு…” உள்ளிட்ட சுபராக பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்ற விதமாக இதமாக நகர்கிறது. சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் காட்சிகள் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
சொல்லவந்த விஷயங்களை லாஜிக் குறைபாடுகளுடன் தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக சொல்வது படத்தின் பலவீனமாக அமைந்துவிட்டது. மேலும் அவற்றை இன்னும் கொஞ்சம் கூடுதலாக புரியும்படியும் படமாக்கியிருந்தால் ரசிகனால் படத்துடன் எளிதில் ஒன்ற முடிந்திருக்கும் என்பதே உண்மை. இருந்தாலும் பல இடங்களில் நடைபெறும் தனியார் மருத்துவதுறை குற்றங்களை, பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் துணிச்சலுக்காக ‘யாக்கை’ பட இயக்குனர் குழந்தை வேலப்பநை தாரளமாக பாராட்டலாம்.