பாண்டிராஜை பார்த்தால் சிவகார்த்திகேயன் பம்முவது ஏன்..!

குருநாதரை பார்த்து சிஷ்யர் மரியாதை காட்டலாம்.. ஆனால் எதற்காக பம்மவேண்டும்..? இத்தனைக்கும் டிவி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை ஒரு ஹீரோவாக தனது ‘மெரீனா’ படத்தில் துணிந்து அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் தானே.. அப்புறம் ஏன் சிவகார்த்திகேயன் நழுவ முயற்சிக்கிறார்.

பொதுவாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர்களுக்கு ஒரு சாபக்கேடு உண்டு .. அதை சாபக்கேடு என்று சொல்வது கூட தவறுதான்.. அதாவது ஒருவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் இயக்குனர் அவர் பின்னாளில் பெரிய ஹீரோவாக வருவார் என முன்கூட்டியே கணித்துவிட்டால், அவரிடம் குறைந்தது மூன்று படங்கள் தனக்கு நடித்து கொடுத்துவிட்டுத்தான் மற்ற படங்களில் நடிக்கவேண்டும் என ஒப்பந்தம் போட்டுவிடுவார்.

அல்லது வேறு படங்களில் நடித்துக்கொள்.. ஆனால் எனது படத்திற்கு நான் கேட்கும்போது கால்ஷீட் தரவேண்டும்.. அதுவும் நான் தருவதுதான் சம்பளம் என ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள். முதலில் சொன்னதற்கு இரண்டாவது சிஸ்டம் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். முன்பெல்லாம் கதாநாயகிகளுக்கு மட்டுமே போடப்பட்ட இப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் இன்று ஹீரோக்களுக்கும் போடப்படுகின்றன என்பது உண்மை.

அப்படித்தான் இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தும்போது இரண்டாவது சிஸ்டப்படி, மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தார். மெரீனா முடித்து அடுத்ததாக பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.. இப்போது மூன்றாவது படத்தில் நடிக்க சிவாவை பிடிக்க அலைகிறார் பாண்டிராஜ்.. ஆனால் சிவாவோ பிசியாக இருப்பதுபோல காட்டிக்கொண்டு பம்முகிறார்.

ஒரு படம் தானே.. தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் தானே.. பேசாமல் சிவகார்த்திகேயன் நடித்து கொடுத்துவிடலாமே என்றுதானே நினைக்கிறீர்கள்..? இன்றைய தேதிக்கு சிவாவின் சம்பளம் ஐந்து கோடிகளை தாண்டிவிட்டது. படத்தின் பிசினஸ் 15 கோடிகளையும் வசூல் 3௦ கோடியையும் தொட்டுவிட்டது. ஆனால் பாண்டிராஜ் சிவாவை அறிமுகப்படுத்தும்போது ஒரு சிறிய தொகையைத்தான் சம்பளமாக கொடுத்தார்.

இரண்டாவது படத்தில் நடிக்கும்போது லட்சங்களில் தான் சம்பளம் கொடுத்தார். அதனால் இப்போது சிவாவை நடிக்க அழைத்தால் கோடிகளில் சம்பளம் கொடுத்தால் அதுவே ஆச்சர்யம். அப்படி அழைக்கும்போது கறாராக இத்தனை கோடி சம்பளம் வேண்டும் என சிவாவால் கண்டிஷன் போடமுடியுமா..? என்ன இருந்தாலும் குருநாதர் அல்லவா..? அதுதான் இப்போது பாண்டிராஜை சந்திப்பதை தவிர்த்து பம்மிக்கொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அப்படி கொடுப்பதை வாங்கிக்கொண்டு, மூன்றாவதாக ஒரு படத்தில் நடித்துவிட்டால் சினிமா சரித்திரத்தில் இடம்பிடித்து விடுவார் என்பது மட்டும் உறுதி. செய்வாரா சிவகார்த்திகேயன்..?