ப.பாண்டி விமர்சனம்


ஒரு மனிதன் தனது வயதான காலத்தை மகனுக்காக, பேரப்பிள்ளைகளுக்காக வாழ்கிறான்.. முதுமைக்காலத்தில் அவனுக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லையா..? தனது குடும்பத்தினரின் வாழ்க்கையைத்தான் அவன் வாழவேண்டுமா..? இப்படி வயதானவர்களின் உணர்வுகளை கதைக்களமாக கையில் எடுத்து இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் இளைஞர் தனுஷ்.

ஒரு களத்தில் கிராமத்தில் கபடி வீரனாக இருந்து, சினிமாவில் பைட் மாஸ்டராக சேர்ந்து இப்போது அதிலிருந்து ரிட்டையர்டு ஆகி மகன் பிரசன்னா, மருமகள் சாயாசிங், பேரப்பிள்ளைகள் என நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பவர் பாண்டி (ராஜ்கிரண்).

ஆனால் அவர் பொது நலனுக்காகவும், குடும்பத்துக்காகவும் செய்யும் சில விஷயங்கள் வீடுதேடி பிரச்சனைகளை கொண்டுவர, அன்பான மகன் தான் என்றாலும், பிரசன்னா இவர் மீது கோபமாகிறார். வார்த்தைகள் தடிக்க, சொல்லாமல் கொள்ளாமல் தனது பைக்கை எடுத்துக்கொண்டு நாடோடியாக மனம்போன போக்கில் கிளம்பி விடுகிறார் ப.பாண்டி..

இப்போது அவருக்கு கிராமத்தில் தனது இளமைக்காலத்தில் ஏற்பட்ட, கைகூடாமல் போன காதல் நினைவுக்கு வருகிறது.. (மடோனா செபாஸ்டியன்) இப்போது எப்படி இருப்பாள் என பார்க்கும் ஆசை எழுகிறது.. சில வழிப்போக்கு நண்பர்கள் மூலம் தனது காதலியின் (வயதான ரேவதி) இப்போதைய இருப்பிடம் தெரிய வருகிறது..

உற்சாகமாக அவரை சந்திக்கிறார்.. அதன்பின் அவரது வாழ்கையில் நிகழனும் மாற்றங்கள் என்ன, அது அவரது சந்தோஷங்களை அதிகப்படுத்தியதா, தனது குடும்பத்துடன் பவர் பாண்டி சேர்ந்தாரா என்பது மீதிக்கதை.

கிராமத்து மனிதராக பார்த்து பழகிய ராஜ்கிரண் இதில் நகரத்து தாத்தாவாக மாறியிருக்கிறார். மகன் மற்றும் குடும்பத்தினருடன் பழகும் பாச முகம், தனது காதலியை தேடி செல்லும் இளைஞனின் மனநிலை கொண்ட உற்சாக முகம் என இரண்டுவித பரிமாணங்களை வெளிப்படுத்தி பவர் பாண்டி கேரக்டருக்கு தான் சரியான தேர்வுதான் என காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் இன்னும் ‘ராசாவின் மனசிலே’ ராஜ்கிரணை ஞாபகப்படுத்தவும் தவறவில்லை

பிளாஸ்பேக் காட்சிகளில் இருபது நிமிடம் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் வந்து ஆச்சர்யப்படுத்துகிறார் தனுஷ்.. ஒரு கிராமத்து வெள்ளந்தி இளைஞனாக இந்தப்படத்தில் தனுஷ் எப்படி இருப்பார் என நீங்கள் எதிர்பார்த்து போகிறீர்களோ, அதேபோலத்தான் இருக்கிறார் தோற்றத்திலும் நடிப்பிலும்…

தனுஷுக்கு ஜோடியாக மதுரை கிராமத்து பெண்ணாக எந்நேரமும் கண்களில் காதலை தேக்கி வைத்திருக்கும் மடோனாவும் நம் மனதில் நிற்கும் கதாபாத்திரம் தான். ஆனால் நிகழ்காலத்தில் இப்போது வயதான பூந்தென்றலாக வரும் ரேவதி மடோனாவை ஓவர்டேக் செய்கிறார்.. அவருக்கும் ராஜ்கிரணுக்குமான குறும்பு நிமிடங்கள் சின்னச்சின்ன ஹைகூக்கள். என்னடா சின்ன வயசுல உன் மூக்கு நீளமா இருந்துச்சு என ரேவதி கேட்க, நான் பார்க்குறது என்ன வேலை..பைட்டர் வேலை.. அடிச்சு ஓடச்சிட்டானுங்க” என ராஜ்கிரண் சாதுர்யமாக காரணம் சொல்லி இருக்கும் இடத்தில் தனுஷின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

இன்னொரு நாயகனாக பிரசன்னா.. அப்பா மீது பாசம், அதேசமயம் அவரது செயல்களால் இயல்பாகவே ஏற்படும் கோபம் இரண்டையும் சரியாக பிரதிபலித்திருக்கிறார்.. அவரது மனைவியாக பாந்தமான மருமகளாக சாயாசிங் பொருத்தமான, நிறைவான கேரக்டர்.. அவர்களது அந்த சுட்டிக்குழந்தைகள் துருவ், சாஷா இருவரும் செம க்யூட்.. காமெடிக்கு வித்யூ, கடைசி நேர சர்ப்ரைசாக விஜய் டிவி டிடி, ராஜ்கிரணிடம் சரிக்கு சமமாக வாயடிக்கும் பீர் பார்ட்டி இளைஞன் வருணாக நடித்துள்ள ரின்சன் ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்..

ரோபோ சங்கர் – கௌதம் மேனன் காமெடி ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ்.. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மனதை வருடிப்போக முயற்சிக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவு, டைரக்டர் தனுஷுக்கு ஏற்ற ஒத்துழைப்பை தந்துள்ளது.

இன்னைக்கு ட்ரெண்டுக்கு படம் எடுக்கிறேன் என தடாபுடாவென அதிரடி கதைகளை கையில் எடுக்காமல், அழிந்து வரும் கூட்டுக்குடும்ப உணர்வு, குறைந்துவரும் பெற்றோர்களுக்கான மரியாதை என உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்து அதையும் இளைஞர்களுக்கான கதையாகவே இயக்கி இருப்பதில் தனுஷ் ஒரு அறிமுக இயக்குனராக வெற்றி பெற்றுள்ளார் என்று தாரளமாக சொல்லலாம்.