மெரினா புரட்சி – விமர்சனம்


2017 ஆம் ஆண்டு தமிழகம் மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் அது தமிழர்களின் வீர விளையாட்டான ‘ஜல்லிக்கட்டு’ போட்டி நடத்த நடைபெற்ற மாபெரும் போராட்டம்.

கன்னியாகுமரியில் ஆரம்பித்து சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் வீறு கொண்டு வெடித்தது. சென்னை மெரினாவில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றிகரமாக போராட்டமாக மாற்றினர்.

இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் பாதிப்புகள் என்னென்ன, அதன் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக விளக்கிய திரைப்படம் தான் இந்த ‘மெரினா புரட்சி’.

ஒரு நேர்காணல் மூலமாக தொடங்கும் படம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வரலாறுகளை நன் கண்முன் காட்சிகளாக வைக்கிறது.

இந்த விளக்க படத்தில் புட் சட்னி புகழ் ராஜ்மோகன், நவீன், ஸ்ருதி ஆகியோர் நடித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் மற்றும் யூ ட்யூப் தளத்தில் வெளியான வீடியோவை கோர்வையாக இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

படமல்ல பாடம் என்று சொல்லி நிறைய படங்கள் நம்மை படுத்தி எடுத்து விடும். ஆனால் மெரினா புரட்சி தான் இதைத்தான் சொல்லப்போகிறேன் என்ற தெளிவோடு வந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி தெரியாதவர்களுக்கு மிகச்சரியான விளக்கம் கொடுக்கிறது படம்.

படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை எந்த ஒரு இடத்திலும் போரடிக்கும் விதமாக சிறிய தொய்வு கூட இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை வரிசைப்படி கோர்த்து ஒரு கமர்சியல் படம் ஆகவே இந்த மெரினா புரட்சியை ஆவணப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்

இது நம் கண்முன் நடந்த வரலாற்றை ஆவணப்படுத்தி உள்ளது.

மனிதனுக்கு மறக்கும் தன்மை அதிகம். அதனால் இப்படியான விசயங்களை நினைவுப்படுத்த வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. அதைச் செவ்வனே செய்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ் ராஜ்.

மொத்தத்தில் “மெரினா புரட்சி” அனைவரும் பார்க்க வேண்டிய படம்