மலையாள திரையுலகில் ஒரு சாதாரண நடிகராக அறிமுகமாகி பின் துணை வில்லன் அதன் பிறகு குணசித்திர நடிகர் பின்னர் கதையின் நாயகன் என படிப்படியாக முன்னேறி வந்த நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் பணி. இயக்குனராகவும் அவருக்கு இந்தப் படம் கை கொடுத்திருக்கிறதா ? பார்க்கலாம்.
திருச்சூரில் ஆள் அம்பு படை என மிகப் பெரிய தாதாவாக வலம் வருபவர் ஜோஜூ ஜார்ஜ். அவரது மனைவி அபிநயா. அம்மா சீமா. இந்த நிலையில் மெக்கானிக் ஆக இருக்கும் இரண்டு இளைஞர்களான சாகர் சூர்யா மற்றும் ஜூனாயஸ் வி.பி என்கிற இருவரும் விரைவில் பணக்காரர்களாக ஆசைப்பட்டு ஒருவரை கொலை செய்து அதன் மூலம் பெரிய தொகையை பெறுகிறார்கள். பெரிய அளவில் பணம் கிடைத்தவுடன் ஒரு தாதாவாக மாறினால் என்ன என்கிற எண்ணம் இருவருக்கும் ஏற்படுகிறது
அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக ஜோஜூ ஜார்ஜூடன் போது இடத்தில் உரசல் ஏற்பட்டு அவரிடம் அடி வாங்குகிறார்கள். அந்த கோபத்தில் அவரது மனைவியை பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். தாதா அல்லவா ? பதிலுக்கு அவர் பழிவாங்க வேண்டாமா ? ஆனால் அப்படி அவர் கொதித்து எழுந்தாலும் இந்த இருவரும் சேர்ந்து அவருக்கு எதிராக பெரிய அளவில் தண்ணீர் காட்டுகிறார்கள்.
மேலும் சேதாரத்தையும் உண்டு பண்ணுகிறார்கள். இந்த நிலையில் அவர்களை ஜோஜூ ஜார்ஜால் எதுவுமே செய்ய முடியாமல் போனதா ? இல்லை. ஒரு தாதாவாக பலத்தை பயன்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் மூளையையும் பயன்படுத்தி அவர்களை ஜோதி ஜார்ஜ் பழிதீர்த்தாரா என்பது மீதி கதை.
தாதாவாக இருந்தாலும் அன்பான குடும்ப தலைவராக, அரவணைத்து போகும் குணம், நட்புக்கு முக்கியத்துவம், தன் மனைவிக்கு நேர்ந்த கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே தவிப்பது, நண்பர்களின இழப்பு பேரடியாக விழுவது, பழி வாங்குவதை நேர்த்தியாக செய்வது என்று அக்மார்க் தாதா களத்துடன் நேர்த்தியாக செய்துள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு ஆக்ஷன் கதையில் அவருக்கும் அபிநயாவுக்குமான காதல் எபிசோடும் சிறப்பாக வந்திருப்பது பாராட்டுக்குரியது. அபிநயா பாத்திரம் தரும் திருப்பம் படத்தின் பலங்களுள் ஒன்று.
இரு இளம் குற்றவாளிகளாக டான் செபாஸ்டியன் சாகர் சூர்யா, சிஜு கே. டி. ஜுனாயஸ் வி.பி செய்யும் அராஜகங்கள் பார்ப்பவர்களை வெறுக்கும் அளவிற்கு தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.
பாபிகுரியன் மனைவியாக வரும் அபயா கிரன்மயி,ஜோஜு ஜார்ஜின் தாயாக வரும் சீமா, காவல்துறை அதிகாரியாக வரும் சாந்தினி ஸ்ரீதரன் ஆகியோரும் இயல்பாகவும் பொருத்தமாகவும் நடித்திருக்கிறார்கள்.
வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜ் ஆகியோரது ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், தோற்றங்கள் மூலம் அவர்களின் குணங்களையும் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறது.
விஷ்ணு விஜய் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பு கொடுத்திருக்கிறது.
மனு ஆண்டனியின் படத்தொகுப்பு மற்றும் அஜயன் அடாட்டின் ஒலி வடிவமைப்பு இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
பெண்களை தொட்டால் என்ன நடக்கும் என புதுவித பழிவாங்கல் கடையாக முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ். அந்தவகையில் இது ஆக்ஷன் கமர்ஷியல் கதை தான் என்றாலும் அதை சுவாரஸ்யத்துடனும், எதிர்பார்ப்புடனும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ்.
.