ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கி பார் வைத்து பிழைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கும் ரிட்டையர்டு ரவுடி தான் விஜய்சேதுபதி. சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு பார்க்கும் விழுப்புரத்து பெண்ணான மடோனா, கம்பெனி மூடப்பட்டதால் சேதுபதியின் எதிர் அபார்ட்மென்ட்டில் குடியேறுகிறார்.
முதலில் சின்னசின்ன சண்டைகள், உரசல்கள் என ஆரம்பித்து போகப்போக இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு துளிர்விடுகிறது.. மீண்டும் நல்ல நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்யும் மடோனாவுக்கு, அந்த வேலை கிடைக்க ரிஸ்க் எடுத்து உதவுகிறார் விஜய்சேதுபதி..
இந்தசமயத்தில் விஜய்சேதுபதிக்கு ஏற்கனவே பார் வைத்திருந்த ஆட்களை அடித்த வகையில் சிக்கல் வருகிறது.. கூடவே தான் நடத்த நினைத்திருந்த பாரை, சஸ்பென்ட் போலீஸ் ஆபிசர் சமுத்திரக்கனி தனது தம்பிக்காக கைப்பற்ற நினைப்பதும் தெரிய வருகிறது.. சமுத்திரக்கனியை போட்டுத்தள்ளும் முயற்சியில் ஈடுபடும்போது பாதிப்பு விஜய்சேதுபதி பக்கம் ஏற்பட, இன்னொரு பக்கம் அவருக்காக காதலுடன் காத்திருக்கிறார் மடோனா..
விஜய்சேதுபதிக்கு என்ன ஆனது..? மடோனா அவருடன் இணைந்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
பரபர ஆக்சனும் இல்லை.. உருகவைக்கும் காதலும் இல்லை… ஆனால் இவை இரண்டும் படத்தில் மிக நுட்பமாக பின்னிப்பிணைந்தே பயணிக்கின்றன. விஜய்சேதுபதிக்கு இது இனொரு விதமான ரவுடி வேடம்.. நூறு சதவீதம் ஜெயிக்கிறார்.. புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் மடோனாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல அவ்வளவு அழகு.. நடிப்பும் இயல்பாக வருகிறது.. சின்னசின்ன எக்ஸ்பிரசன்களை அசால்ட்டாக முகத்தில் கொண்டு வருகிறார்.
சமுத்திரக்கனிக்கு போலீஸ் வில்லன் வேடம்.. நாலு சீன்கள் வந்தாலும் நச்’ சென நிற்கிறார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை தடதடக்க வைக்கிறது. ‘க க க போ’ பாடல் சூப்பர். படத்தின் மற்ற கதாபாத்திரங்களையும் அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி..
கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, க்ளைமாக்ஸுக்கு முன் மடோனாவின் ஊருக்கு செல்லும் தேவையற்ற நேர நகர்த்தல், வேலைக்கு போகவேண்டும் என்பதற்காக காதலன் இருப்பதாக மடோனா ஆட்டும் ட்ராமா இவையெல்லாம் கொஞ்சம் மைனஸ் தான்… நாயகியின் கதைசொல்லலாக படத்தை நகர்த்தி இருப்பது புதுசு
கொரியன் படத்தின் ரீமேக் என்றாலும் அதை நம் ஊருக்கு ஏற்றவாறு மாற்றுவதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் நலன். இளைஞர்களுக்கும் காதலர்களுக்கும் இந்தப்படம் ரொம்பவே பிடிக்கும்.