ஆர்யா, விஷ்ணுவர்த்தன் இணையும் ஐந்தாவது படம் என்கிற எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள ‘யட்சன்’ அந்த எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டுள்ளதா..? பார்க்கலாம்.
தூத்துக்குடியில் கடன் வாங்கிய தகராறில் ஒரு ஆளையே ‘மட்டை’ பண்ணிவிட்டு சென்னைக்கு தப்பி வருகிறார் ஆர்யா. சென்ராயனின் உதவியால் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் ஆர்யா, அதற்கு தேவைப்படும் பணத்திற்காக, தம்பி ராமையா கைகாட்டும் பெண்ணான தீபா சந்நிதியை கொல்ல ஒப்புக்கொள்கிறார்.
அதேபோல சினிமாவில் நடிகனாகும் ஆசையால் சென்னைக்கு வரும் கிருஷ்ணாவுக்கு எதிர்பாராத விதமாக அஜித்துக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு நிகழ்வுகளும் அரங்கேற இருக்கும் ஒரே நாளில் இருவரையும் அழைத்து செல்ல வரும் கார்களில், இருவரும் தவறுதலாக மாறி ஏறிவிடுகின்றனர்..
அந்த தவறு ஆர்யாவை சினிமாவுக்குள் இழுத்துக்கொண்டு செல்கிறது.. கிருஷ்ணாவை கொலைகாரனாக மாற்றுகிறது.. ஒருபக்கம் போலீஸ் துரத்தல், இன்னொரு பக்கம் ரவுடிகளின் துரத்தல் என கிருஷ்ணா பந்தாடப்படுகிறார். கொடுத்த காரியத்தை முடிக்காத ஆர்யாவையும் தான் தப்பிப்பதற்காக தனக்கு வேலை கொடுத்த பெரிய மனிதர் அடில் ஹுசைனின் முன்னால் நிறுத்துகிறார் தம்பிராமையா.
அவர்களிடம் இருந்து தப்பிக்கும் இருவருக்கும் பெரியவர் எதற்கு தீபா சந்நிதியை கொல்ல சொல்கிறார் என்கிற உண்மை தெரியவருகிறது. தங்களுக்கு உதவும் இன்னொரு ரவுடியான பொன்வண்ணனின் உதவியுடன் அவரை இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள், போலீசை சமாளித்து எப்படி இந்த சிக்கலில் இருந்து மீள்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
இதுநாள் வரை பெண்கள் பின்னாலேயே சுற்றி அலைந்த லவ்வர் பாய் ஆர்யா இதில் காணமல் போய், புது ஆளாக மாறியுள்ளார். அஜித் பட டிக்கெட்டை ஒருத்தன் கிழித்துவிட்டான் என்பதற்காக ஆளையே போட்டு தள்ளும் இடம் செம ரகளை.. ஆனால் இதெல்லாம் கொஞ்சம் ஓவரில்லையா பாஸ் என இயக்குனரை பார்த்து கேட்கவும் தோன்றுகிறது.
தம்பி என்றெல்லாம் பாராமல் இதில் கிருஷ்ணாவை செம ட்ரில் வாங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது. நடிகனாக கேமரா முன் நிற்க்வேண்டியவன், கொலைகாரனாக மாறவேண்டிய பதட்டத்தை சரியாக வெளிபடுத்தியுள்ளார் கிருஷ்ணா. ஆர்யாவுக்கும் அவருக்குமான உறுமல்கள் எல்லாம் காமெடி ஏரியாவில் கணக்கில் சேர்கின்றன..
காசு கொடுத்து காதலனை சினிமாவுக்கு அனுப்பிவைக்கும் ‘புதுமைப்பெண்’ணாக ஸ்வாதி.. இன்னொரு கதாநாயகியான ‘மின்னல் அழகி’ தீபா சந்நிதியும் ஒகே தான் என்றாலும் ஸ்வாதியின் படபட நடிப்பின் முன் கொஞ்சம் கீழே இறங்கித்தான் நிற்கிறார்.
வில்லன் அடில் ஹுசைனுக்கு அவ்வளவுதான் நடிக்க வருமா, இல்லை அந்த அளவுக்கு நடித்தால் போதும் என இயக்குனர் சொல்லிவிட்டாரா என தெரியவில்லை.. ஒரு புதுமாதிரியாக முயற்சி பண்ணியிருக்கிறார்.. சாமி சத்தியமாக தம்பிராமையா பணம் கொடுப்பதும், ஆர்யா கொலை பண்ண ஒப்புக்கொள்வதும் விஷ்ணுவர்தனின் முந்தைய ‘பட்டியல்’ படத்தை ஞாபகப்படுத்த தவறவில்லை.
ஐந்து நிமிட அளவிலேயே வந்தாலும் அஜித் படத்தை டைரக்ட் பண்ணப்போவதாக எஸ்.ஜே.சூர்யாவின் பந்தாவும், நடிக்க வரவேண்டியவன் வரவில்லை என்றதும் உதவியாளர்களிடம் காட்டும் டென்சனும் கலகலப்பூட்டுகின்றன. கை ஒடிந்த நிலையில் கட்டுப்போட்டுக்கொண்டு ஆர்ஜே பாலாஜி பண்ணும் அட்ராசிட்டி ஓரளவு ரசிககவைக்கின்றது.
சுருட்டை முடி யோகிபாபு நாளுக்கு நாள் காமெடியில் கவனம் பெற்றுவருவது இந்தப்படத்தில் அவருக்கு கிடைக்கும் கைதட்டல்களிலேயே தெரிந்துவிடுகிறது. கார் மாறி ஏறினது ஒரு தப்பாய்யா என சமய சந்தர்ப்பம் புரியாமல் காமெடி பண்ணும் அழகம்பெருமாளும், ப்ளஸ்டூ பாஸானதை விழா எடுத்துக்கொண்டாடும் பொன்வண்ணனும் கூட காமெடி பண்ணுகிறார்கள்.. அடடே..
யுவன் பாடல்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துவிட்டு, பின்னணி இசையில் அழுத்தம் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஓம பிரகாஷின் ஒளிப்பதிவில் ஒரு புதுவிதமான் கலர் டோன் படம் முழுவதும் இழையோடுவது புதிய முயற்சி. இங்கே போகவேண்டியவன் அங்கே போனால் என்கிற ஒரு டிவிஸ்ட்டை வைத்து எவளவு பரபரப்பாக திரைக்கதை அமைத்திருக்கலாம். ஆனால் எழுத்தாளர் சுபா அவர்கள் நம்மை கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு முந்தைய படங்களின் ஞாபகத்திற்குத்தான் அழைத்து செல்கிறார்கள்.. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதை உறுதி செய்கிறது.
ஸ்டைலிஷான படங்களை இயக்குபவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான விஷ்ணுவர்தன், இந்தப்படத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ பாணியில் ஜாலியாகக்கொண்டு செல்லும் முயற்சியில் திரைக்கதையில் சீரியஸ்னெஸ் காட்டாமல் விட்டுள்ளார். துரத்தல் காட்சிகளும், ரவுடிகள் அடிக்கடி கோட்டை விடுவதும் இது எந்தவகை படம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ரசித்து சிரிக்க நிறைய விஷயங்கள் இருப்பதால் ஆவரேஜுக்கும் மேலே ஒரு இடத்தை பிடிக்கிறான் ‘யட்சன்’.