ஸ்ட்ராபெரி – விமர்சனம்

பேய்க்கு நடுங்குகிறோமோ இல்லையோ, பேய்க்கதைகளில் இன்னும் என்னவெல்லாம் பண்ண காத்திருக்கிறார்களோ என நிச்சயமாக நடுங்கும் வேளையில், அதில் இன்னொரு படமாக வந்துள்ளது ‘ஸ்ட்ராபெரி’. பாடலாசிரியர் பா.விஜய் இந்த முறை நடிப்புடன் டைரக்சன், தயாரிப்பு என எல்லா ஏரியாவிலும் கால் வைத்துள்ள படம் இது…

கால் டாக்ஸி ட்ரைவரான பா.விஜய்யை சந்திக்க ஒரு ஆத்மா (ஆவி என சொல்லக்கூடாதாம்) விரும்புகிறது.. இந்த விஷயம் ஆவிகளுடன் பேசும் மீடியமான ஜோ மல்லூரி மூலம் பா.விஜய்க்கு தெரிய வருகிறது. ஜோ மல்லூரியும், அவரது மகளான அவனி மோடியும் அந்த ஆத்மாவை சந்தித்து பேச அவரை தயார்படுத்துகிறார்கள்.

ஒரு வழியாக அந்த ஆத்மா பா.விஜய்க்கு தரிசனம் தர, அது சமுத்திரகனி-தேவயானி தம்பதியின் மகளான, பள்ளிப்பேருந்தில் இருந்து கீழே விழுந்து இறந்துபோன குழந்தையின் ஆத்மா என்பதும், அந்த குழந்தை சாகும் தறுவாயில் கடைசியாக பார்த்த நபர் பா.விஜய் தான் என்பதால் அவரை சந்திக்க விரும்புவதும் தெரிய வருகிறது.

குழந்தையின் ஆத்மா தனது சாவுக்கு காரணமான அலட்சியவாதிகளை பழிவாங்க சொல்லி பா.விஜய்யிடம் கோரிக்கை வைக்கிறது. ஜோ மல்லூரியும் அவரது மகளும் அந்த கயவர்களை காப்பாற்ற பணம் வாங்கிக்கொண்டு, குழந்தையின் ஆத்மாவுக்கு எதிராக நிற்கிறார்கள். இதை மீறி பா.விஜய்யால் என்ன சாதிக்க முடிந்தது என்பதுதான் மீதிப்படம்.

பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பில் அலட்சியம் இருக்க கூடாது என்கிற விஷயத்தை முன்வைத்து விழிப்புணர்வு ஊட்டும் படமாக எடுக்க முன்வந்ததற்காக ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக பா.விஜய்யை முதலில் பாராட்டிவிடுவோம். ஆனால் அதை சொல்வதற்காக அவர் இவ்வளவு சுற்று சுற்றி, நம்மையும் கண்ணு வேர்க்க வைத்திருக்க வேண்டுமா என்பது தான் கேள்வி..

படத்தில் மற்ற யாரையும் விட பள்ளிக்குழந்தையாக நடித்திருக்கும் யுவினா நம் மனதை அப்படியே அள்ளிக்கொள்கிறார். அவர் பேருந்தில் இருந்து தவறி விழும் காட்சி, பல மாதங்களுக்கு முன்னாள் நடைபெற்ற இதேபோன்ற நிஜத்தை நினைவூட்டி மனதை அதிரவைத்து விடுகிறது.

பா.விஜய் நடிக்க முயற்சிக்கிறார்.. ஆனால் நடிப்பு அவரது கைக்கெட்டும் தூரத்தில் நின்றுகொண்டு அவரிடம் போவேனா என போக்கு காட்டுகிறது. கதாநாயகி என்கிற பெயரில் வரும் அவனி மோடி, பா.விஜய்யுடன் காரில் போய் வருவதுடன் தன் வேலையை முடித்துக்கொண்டு, பேட்டா வாங்கி கிளம்பி விடுகிறார்.

குழந்தையை பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் தந்தையாக, குழந்தைகள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய பள்ளி நிர்வாகத்தின் மீது போர் தொடுக்கும் ஒரு சாதாரண மனிதனாக சமுத்திரகனி நம் மனதில் நிறைகிறார். அவரது மனைவியாக வரும் தேவயானியும் குழந்தையால் ஏற்பட்ட பாதிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

எக்கச்சக்க பில்டப்புகளுடன் அறிமுகமாகும் ஜோ மல்லூரி, எவ்ளோ பெரிய அப்பாடக்கர் ஆவிகளை எல்லாம் அசால்டாக சமாளிக்கும்போது, குழந்தையின் ஆவியை பிடிக்க, பா.விஜய்யை தங்கள் வலைக்குள் இழுப்பதெல்லாம் மூட்டைப்பூச்சியை பிடித்து உரலில் போட்டு கொல்லும் கதைதான்.

இயக்குனர் பா.விஜய்க்கு டாப் ஆங்கிளில் ஷாட் வைப்பதிலும், கத்திப்பாரா மேம்பாலத்தை காட்டுவதிலும் அவ்வளவு இஷ்டமா..? எத்தனை முறை காட்டுகிறார் என க்விஸ் போட்டியே வைக்கலாம். தவிர சம்பந்தமே இல்லாமல் ஒரு பொம்மையை எல்லா இடத்திலும் போட்டு வைப்பதும், திடீரென காரை படு ஸ்பீடாக ஒட்டி பயமுறுத்துவதும் என சின்னச்சின்ன ‘சில்பான்ஸ்’ வேலைகல் எலாம் பெய்படத்தின் இலக்கணம் என நினைத்துவிட்டார் போல. அத்தனையும் படத்தின் திரைக்கதைக்கு உதவாமல் வேஸ்ட் ஆகிவிடுகின்றன.

விபத்தில் மரணம் அடைபவர் கடைசியாக யார் முகத்தை பார்த்தபடி கண்களை மூடுகிறார்களோ, அவர்கள் பேயாகவோ, ஆவியாகவோ, ஆத்மாகவோ மாறும்போது, தங்களது சொந்த வீட்டுக்கு கூட போகாமல் கடைசியாக பார்த்தவர்களை தேடித்தான் போவார்கள் என்கிற கான்செப்பட்டை யார் உருவாக்கி உலவிட்டார்களோ தெரியாது. ஏற்கனவே இரண்டு படங்களை பார்த்துவிட்டோம்.. இந்தப்படத்துடன் அது கடைசியாக இருக்கட்டும்.