General News

ரஜினியை விமர்சித்தவரே மீண்டும் புகழ்ந்த அதிசயம்..!


சீப் பப்ளிசிட்டிக்காக தனக்கு தோன்றிய கருத்தையெல்லாம் டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர் தான் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

எந்திரன் படத்தில் ரஜினிக்கு பதிலாக அமிதாப் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனவும், அதேசமயம் அமிதாப் நடித்த டீன்3 படத்தில் அமிதாப்புக்கு பதிலாக ரஜினி நடித்திருந்தால் ரொம்ப சுமாராக இருந்திருக்கும் எனவும் கூறி ரஜினி ரசிகர்களிடம் தொடர்ச்சியாக கண்டனங்களை வாங்கிக்கட்டிக்கொண்டவர் தான்.

இப்போது ரஜினி அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளதற்கும் ஏதாவது மோசமான கமென்ட் சொல்லுவார் என நினைத்தால் அதற்கு மாறாக ரஜினிகாந்தைப் பாராட்டித் தள்ளிவிட்டார்.

“ரஜினிகாந்த் அவருடைய அரசியல் நுழைவு பற்றிய அறிவிப்பில், இதற்கு முன் அப்படி ஒரு சக்தியைப் பார்த்ததில்லை. என்னுடைய கணிப்புப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்காக மட்டுமே வாக்களிப்பார்கள். அவருக்கு எதிராக எந்த ஒரு கட்சி நிற்பதும் முட்டாள்தனமானது. சிலரால் தமிழ் மக்கள் அவர்களது பெருமையை இழந்துவிட்டார்கள், நான் அதைத் திரும்பக் கொண்டு வருவேன் என ரஜினிகாந்த் பேசியிருப்பது மிகச் சிறந்த வார்த்தை.” என வர்மா கூறியுள்ளது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.