இதுநாள் வரை விளையாட்டை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வீரர்கள் குறித்த சுயசரிதை படங்கள் மட்டுமே வெளியாகி வந்துள்ளன. இந்த நிலையில் முதன்முறையாக இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் சுயசரிதை இந்தியாவில் குறிப்பாக தமிழில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்திருக்க வேண்டிய படம் இப்போது மது மிட்டல் என்கிற ஒரு வட மாநில நடிகரின் நடிப்பில் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் புதிதாக ஏதாவது சொல்லி இருக்கிறார்களா ? பார்க்கலாம்.
முத்தையா முரளிதரனின் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து அவரை கவனித்து பார்த்து வருபவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ஆச்சர்யத்தை தராது.அதே சமயம் இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு முத்தையா முரளிதரன் யார் என்பதை அழுத்தமாக இந்த படம் பதிவு செய்துள்ளது.
கதாநாயகனாக நடித்துள்ள மதூர் மிட்டல் என்பவருக்கு இந்த படத்தில் இரண்டு சவால்கள். ஒன்று முத்தையா போல நடிக்க வேண்டும்.. இன்னொன்று அவரைப் போல வேகமாக பந்து வீச வேண்டும். ஆனால் மிகப்பெரிய அளவில் பயிற்சி பெற்றதாலோ என்னவோ இந்த இரண்டு குணாதிசயங்களையும் ஒன்றாக கொண்டு வந்து படம் பார்ப்பவர்களுக்கு முத்தையா முரளிதரன் தான் திரைக்குள் இருக்கிறாரோ என்கிற எண்ணத்தை படம் முழுவதும் தனது நடிப்பால் ஏற்படுத்தி விடுகிறார் மாத்தூர் மிட்டல்.
இயக்குனர் ஸ்ரீபதி எந்த அளவிற்கு இந்த கதையை உயிர் உடன் கொடுக்க முயற்சித்து இருக்கிறாரோ அதில் ஓரளவுக்கு வெற்றியை பெற்று இருக்கிறார். முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களாக இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி காட்டியிருக்கும் பெரும்பாலான காட்சிகள் துணிச்சல் மிகுந்தவையாக தான் இருக்கின்றன. குறிப்பாக எண்பது 90 காலகட்டங்களின் நிகழ்வுகளையும் கிரிக்கெட் போட்டி மைதானம் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் வெகு நேர்த்தியாக கையாண்டு உள்ளார்.
முத்தையா முரளிதரனின் மனைவி கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார். கிரிக்கெட் தான் களம் என்பதால் இவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும் ஒரு தமிழ் பெண்ணாக ஒரு இலங்கை கிரிக்கெட் வீரரின் மனைவியாக அவர் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை ஒரு சில காட்சிகளிலேயே அற்புதமான வசனங்களால் உணர்த்தி விடுகிறார்.
இவர்களை தாண்டி கிங் ரத்தினம் என்கிற நடிகரும் இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரையும் பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம். நரேனுக்கு தியேட்டரில் கிடைக்கும் கைதட்டல்கள் எந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை அவர் பிரதிபலிக்கிறார் என்பதை உணர்த்தி விடுகின்றன. நாசர், வேலா ராமமூர்த்தி, வடிவுக்கரசி ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இது போன்ற படங்களில் சில இடங்களில் டாக்குமென்டரி பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதே போன்று இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட சில காட்சிகள் இருக்கின்றன. கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு தான் படம் என்றாலும் நமக்கு பிடித்த நம் இந்திய நட்சத்திர வீரரின் படத்தை பார்ப்பதற்கும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. அதை படம் பார்க்கும்போது உணர முடிகிறது.மற்றபடி இது ஒரு வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் குறை சொல்வதற்கு என தனியாக எதுவும் இல்லை.