சித்தா ; விமர்சனம்

இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் சித்தா.

பழனியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சித்தார்த் நகராட்சி தூய்மை பணி அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய காதலி நிமிஷா சஜயன் கடைநிலை தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறார்.

சித்தார்த்தின் அண்ணன் மகளுடன் படிக்கும் சக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். பழி சித்தார்த் மீது விழுகிறது. போலீசிலும் பிடித்து கொடுக்கின்றனர். பிறகு அவர் நிரபராதி என்று தெரிய வருகிறது. இதுபோல் சித்தார்த்தின் அண்ணன் மகளும் கடத்தப்படுகிறார். கடத்தியவர் யார்? குழந்தை மீட்கப்பட்டதா? என்பது மீதி கதை.

சித்தார்த், சிறுநகரத்து இளைஞனாக மாறியிருக்கிறார். அண்ணன் மகளிடம் அன்பு காண்பிப்பது, பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வது, தன் மீது காண்பிக்கும் கோபத்தைக் கடந்துசெல்வது எனக் கனிவும் முதிர்ச்சியும் மிக்கவராக மனதில் பதிகிறார். குழந்தைகள் சஹஸ்ரா ஸ்ரீ, அபியா தஸ்நீம் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அஞ்சலி நாயர் உட்பட அனைவரும் நடிப்பைக் குறையின்றித் தந்துள்ளனர். திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது.

சிறார் மீதான பாலியல் வன்முறை, அது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வதற்குத் தேவையான புரிதல் ஆகியவை தொடர்பான சமூக விழிப்புணர்வுப் படத்தைப் பிரச்சார நெடி இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.

செல்போனுக்கு பிள்ளைகள் அடிமையாவது, பிள்ளைகள் விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பது என குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இயக்குனர் அருண்குமார் மெல்லிய கனம் சேர்த்து சொல்லியுள்ளார்.