அரிமாபட்டி சக்திவேல் ; விமர்சனம்


திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாபட்டி கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதன்படி, அந்த ஊரில் இருப்பவர்கள் காதல் திருமணமோ அல்லது வேறு சாதியிலோ திருமணம் செய்யக் கூடாது. அப்படி செய்தால், அவர்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைப்பதோடு, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட கிராமத்து இளைஞரான நாயகன் பவன், பக்கத்து ஊரைச் சேர்ந்த நாயகி மேக்னா எலனை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள அதனால் அவர் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறார், கட்டுப்பாடு மிக்க அரிமாபட்டி கிராமம் நாயகனின் காதல் திருமணத்திற்கு பிறகு மாற்றமடைந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

மீசை எடுத்துக் கொண்டால் மாணவன், மீசை தாடி வைத்துக் கொண்டால் வாலிபன் என்கிற சினிமா இலக்கணப்படியே வரும் பவன் எல்லா வித்தைகளையும் நன்றாகக் கற்று வைத்திருக்கிறார். ஆனால் நடிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும்.

நாயகி மேகனா அழகாக தோன்றி காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

மூத்த நடிகர்களான சார்லி, அழகு, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாகவே செய்து முடித்திருக்கிறார்கள். ஒரு சில இடத்தில் சார்லியின் ஓவர் ஆக்டிங்கை சற்று குறைத்திருக்கலாம். நாயகியின் அண்ணனாக பிர்லா போஸ் முரட்டுத்தனம் கோபம் என முறுக்கிக் கொண்டு நிற்கிறார்..

ஒளிப்பதிவாளர் ஜெ பி மேன்.. கிராமத்து அழகை கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை அழகாக கண் முன் நிறுத்தி இருக்கிறார். மணி அமுதவன் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது.. காதல் பாடல்களும் கவர்கிறது.. அந்தோணி தாசன் பாடிய ‘வண்ண வண்ண இறகு நீ’ பாடல் அருமை.

கட்டுப்பாடும், சுயஒழுக்கமும் வாழ்க்கையில் மிக முக்கியம் தான் என்றாலும், அரிமாபட்டி கிராமத்தின் இத்தகைய கட்டுப்பாடு, ஒரு தனிமனிதனின் விருப்பத்தையும், அவன் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களையும் எப்படி சிதைக்கிறது என்பதை மிக தெளிவாக விவரித்திருக்கும் இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இன்னமும் தமிழ்நாட்டில், மாற்று சாதியினரை திருமணம் செய்து கொண்டால் ஊருக்குள் விட மாட்டோம் என்ற மடப்போக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு உரைக்கும் விதமாக கதைகளத்தை இன்னும் அழுத்தமாகவே கூறியிருந்திருக்கலாம்.