நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ; விமர்சனம்


நடுத்தர வர்க்க குடும்பங்களில் “அடுத்து என்ன..?” என்று யோசிக்க வேண்டிய அடாலசன்ஸ் பருவத்தைத் தாண்டிய இளைஞர்களைப் பற்றிய கதை இது.

படத்தின் நாயகன் செந்தூர் பாண்டியன் தனது நண்பர்களுடன் ஊரை சுற்றி பொழுது போக்கி வருகிறார். பேஸ் புக் தளத்தில் இருக்கும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பது இவரது வழக்கம். அப்போது மாயவரத்தில் இருக்கும் நாயகி ப்ரீத்தி கரணுடன் பேஸ் புக் மூலமாக பழக்கம் ஏற்படுகிறது.

ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்திற்குச் செல்கிறார் செந்தூர் பாண்டியன். நாயகி ப்ரீத்தி கரணுடன் எப்படியாவது உல்லாசமாக இருந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறார் செந்தூர் பாண்டியன். சென்ற இடத்தில் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தார் அதில் இருந்து எப்படி தப்பித்து வந்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனுக்கு இது தான் முதல் படம். ஆனால், அதை வெளிக்காட்டாமல் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஒரு நடிகருக்கான எந்த இமேஜும் இல்லாமல், நாம் அன்றாட சந்திக்கும் சக மனிதராக வரும் அவரது ஒவ்வொரு அசைவுகளும் தற்போதைய இளைஞர்களின் மனநிலையையும், வக்கிர எண்ணத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

நாயகி ப்ரீத்தி கரண், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார் காட்சிகளில் அளவாகவும் நடித்திருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக நடித்திருக்கிறார்.

நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சுரேஷ் மதியழகன், வயதுக்கு ஏற்ற ஏக்கத்தோடு வலம் வரும் காட்சிகளும், நண்பனுக்காக ஆணுறை வாங்கும் காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார். இவரும் புதியவர் தான், ஆனால் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

நாயகியின் தோழியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி, அவரது தங்கையாக நடித்திருக்கும் தமிழ்செல்வி ஆகியோரும், அவ்வபோது தலைக்காட்டும் சிறு சிறு நடிகர்களும் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு அதற்கு பக்கபலமாக வந்து நின்றிருக்கிறது. பிரதீப் குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதைக்கேற்ற பயணமாக உறுதுணையாக நின்றிருக்கிறது.

சோசியல் மீடியாவில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் மற்றும் ஆண்களின் உணர்வுகளை இந்த படம் பிரதிபலிக்கிறது. அதற்கு ஏற்ப எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். கிராம இளைஞர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்கால கடந்த கால நினைவுகளை பல இடங்களில் நினைவிற்கு கொண்டு வந்து சென்றிருக்கிறார் இயக்குனர். எங்கும் சினிமாத்தனம் இல்லை ஆனால் இது ஒரு டாக்குமென்டரி குறும்படம் போலவே உள்ளது. 18+ படம் என்பதால், பல வசனங்கள் நேரடியாகவே படம் பார்க்கும் ரசிகர்களை வந்து சேர்ந்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட கருத்து ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவதாக அமைந்தது பெரும் பலம்.