லாக்கர் ; விமர்சனம்


வழக்கம்போல திருட்டுதொழில் செய்யும் நாயகன்.. அவனை காதலிக்கும் நாயகி.. உண்மை தெரிந்ததும் ஊடல்.. பின்னர் கூடல்.. இதை வைத்து வேறுகோணத்தில் புதிதாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன்.. எப்படி இருக்கிறது இந்த லாக்கர் ? பார்க்கலாம்.

கதாநாயன் விக்னேஷ் சண்முகமும் அவரது நண்பர்களும் இணைந்து ஒரு வழிப்பறியில் இறங்குகிறார்கள். தேர்தலில் மக்களுக்காக வாக்குக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் பல லட்ச ரூபாய் பணத்தை நூதனமான முறையில் மோசடி செய்து கைப்பற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட நாயகனை நிரஞ்சனி காதலிக்கிறார்.
காதலன் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்து விலக நினைக்கிறார். தன்னைப் பற்றித் தவறாக நினைத்த காதலியை விக்னேஷ் அறைந்து விடுகிறார். விக்னேஷ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல விரும்புகிறார். அவர்கள் இருவரும் தனியே அமர்ந்து ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வரும் ஒருவரைப் பார்த்து பதற்றப்பட்ட நிரஞ்சனி, அந்த நபரைப் பற்றிக் காதலனிடம் கூறுகிறார்.

அவர் தன் குடும்ப சொத்துக்களை அபகரித்துக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு,தன்னை அனாதையாக்கியவர் என்கிறார் .அதனால் அவரைப் பழிவாங்க வேண்டும் என்று காதலனைத் தூண்டிவிடுகிறார்.. அதன் பிறகு நடக்கும் திடுக் திடுக் சம்பவங்கள் தான் ‘லாக்கர்’ படத்தின் கதை செல்லும் பயணம்

நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகம் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்த்டிருப்பதால் கதாநாயகனாக இது முதல்படம். ஆனால் அது தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நிரஞ்சனா அசோகன் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை இல்லை. கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்திருப்பவர் முதல் படத்திலேயே கதையில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை கன கச்சிதமாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்..

வில்லனாக நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்தன், முக்கியபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணியன் மாதவன்,நாயகனின் நண்பராக வரும் தாஜ்பாபு ஆகியோரும் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

தணிகை தாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராகவும் அதே சமயம் தரமாகவும் உள்ளது. இது ஒரு சின்ன பட்ஜெட் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தனது கேமரா கோணங்கள் மூலம் அனைத்து காட்சிகளையும் கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார்.

வைகுந்த் ஸ்ரீனிவாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இனிமையாக இருக்கின்றன குறிப்பாக திருநெல்வேலி மற்றும் விறுவிறுப்பாக நகரும் காட்சிகளில் பின்னணி இசை கட்சி தாகமாக கொடுத்திருக்கிறார்.

திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்கள் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டை இயக்குனர்கள். நாயகனின் மோசடி மற்றும் காதல் என்று முதல் பாதையில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கதையை விவரிக்கும் இயக்குனர்கள் இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை அதிகரித்து இருப்பதோடு எந்த இடத்திலும் தடுமாறாமல் கிளைமாக்ஸ் வரை பரபரப்பை கொண்டு செல்கிறார்கள் இறுதியில் வைக்கப்பட்ட திருப்புமுனை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.

படம் பார்க்க வரும் ரசிகர்களை இந்த லாக்கர் ஓரளவு திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.