பார்க்கிங் ; விமர்சனம்


எம்.எஸ்.பாஸ்கர் ஒரு அரசு அதிகாரி. அவர் குடியிருக்கும் வீட்டின் மாடி போர்ஷனில் தனது மனைவி இந்துஜாவுடன் குடியேறுகிறார் ஐடி ஊழியரான ஹரீஷ் கல்யாண். ஒரே ஒரு கார் நிறுத்தும் இடத்தில் இந்த இருவரும் தங்களது இருசகர வாகனங்களை எந்த பிரச்சனையுமின்றி பார்க்கிங் செய்து வருகின்றனர். ஆனால் ஹரீஷ் கல்யாண் தனக்கென சொந்தமாக ஒரு கார் வாங்கிய பிறகு பூதாகரமாக மாறுகிறது பார்க்கிங் பிரச்சனை.

கார் நிறுத்தப்படுவதால் தனது டூவீலரை நிறுத்த சிரமப்பட்டு அதனால் எரிச்சலாகிறார் எம்.எஸ்.பாஸ்கர். அதுவரை நட்பாக பழகி வந்த இருவரும் எலியும் பூனையுமாக மாறுகின்றனர். இருவருக்குள்ளும் ஈகோ யுத்தம் தலைதூக்க, ஒருவரை ஒருவர் கவிழ்க்கும் அளவுக்கு திட்டங்கள் தீட்டுகின்றனர். வயதை மறந்து சரிக்கு சரியாக மோதிக்கொள்கின்றனர். இதற்கு என்னதான் தீர்வு கிடைத்தது என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது எம்.எஸ்.பாஸ்கர் தான். தனது அனுபவத்திற்கேற்ற நடிப்பை கொடுத்து பிரமிப்பூட்டுகிறார். குறிப்பாக தனது வயதை மறந்து இளைஞரான ஹரீஷ் கல்யாணிடம் சண்டை போடுவதில் இருந்து தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக அவர் செய்யும் காரியங்கள் மிரள வைக்கின்றன. பெரும்பாலும் தனது உடல்மொழி மற்றும் முக பாவனைகளாலேயே நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மனிதர்.

ஐடி இளைஞராக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், இளமையாக இருந்தாலும் முதிர்ச்சியான நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். தனது புதிய காருக்கு ஏற்படும் சிறு பாதிப்பில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துபவர், பார்க்கிங் பிரச்சனையில் விஸ்வரூபம் எடுக்கும் போதும் சரி, தன் மீது விழுந்த பாலியல் குற்றச்சாட்டால் மனமொடிந்து போகும் இடங்களிலும் சரி நடிப்பில் அசத்தியிருப்பதோடு, தன்னால் எப்படிப்பட்ட கதபாத்திரத்தையும் நேர்த்தியாக கையாள முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்

ஹரிஷ் கல்யாணின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜா, கதையோட்டத்தை வலுப்படுத்துவதற்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமா, மகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா, வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் இளவரசு ஆகியோரது நேர்த்தியான நடிப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

ஒளிப்பதிவாலர் ஜிஜு சன்னி, ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைக்கதையை மிக இயல்பாக படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை வேகமாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார். பிலோமின் ராஜின் படத்தொகுப்பு காட்சிகளை விறுவிறுப்பாக கடத்துவதோடு, சில இடங்களில் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்து படபடக்க வைத்துவிடுகிறது. குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரை சிக்க வைக்க ஹரிஷ் கல்யாண் போடும் திட்டம் பரபரப்பின் உச்சம்.

வாடகை குடியிருப்பில் வசிப்பவர்கள் மட்டும் அல்ல சொந்த வீட்டில் இருப்பவர்கள் கூட சில சமயங்களில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதிவதோடு, கதையோட்டத்துடன் தங்களையும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

ஈகோ பிரச்சனையும், அடுத்தவரை அனுசரித்து போகாத குணமும் மனிதன் நிம்மதியை எப்படி சீரழிக்கிறது என்பதை அழுத்தமான காட்சிகள் மூலம் அழகாகப் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். படத்தின் கதை வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.

துவக்கத்தில் இரண்டு குடும்பங்களும் சகஜமாக பேசிப் பழகுவதும், பின்னர் சிறு பொறிபோல் தோன்றிய பார்க்கிங் பிரச்சனை எப்படி பெருநெருப்பாக வளர்கிறது என்பதை நம்பத்தகுந்த காட்சிகள் மூலம் நயம்பட சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

ஈகோ பிரச்சனையை மையமாக வைத்து மலையாளத்தில் தான் அழகியலான படங்கள் வெளியாவது உண்டு.. தமிழிலும் அப்டி ஒரு படம் கொடுக்க முடியும் என்பது போல வெளியாகியுள்ள படம் தான் இந்த பார்க்கிங்.