லக்கிமேன் ; விமர்சனம்


யோகி பாபு சிறுவயதிலிருந்தே தான் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று தன்னை நினைத்துக் கொள்பவர். அதற்கு ஏற்ற மாதிரி நிகழ்ச்சிகளும் அப்படித்தான் நடக்கின்றன. மனைவி, மகன் என வாழும் யோகி பாபுவுக்கு திடீரென அதிர்ஷ்ட பரிசாக ஒரு கார் கிடைக்கிறது. ஏற்கனவே தான் பார்த்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலிலுக்கு இந்த கார் ரொம்பவே உதவியாக இருக்கும் என நினைக்கிறார்.

அதுபோலவே வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உள்ளே நுழைய, சில நாட்கள் ஜாலியாக செல்லும் சூழலில் திடீரென அவரது கார் காணாமல் போய்விடுகிறது. அதாவது ஒரு போலீஸ் அதிகாரியால் திட்டமிட்டு மறைத்து வைக்கப்படுகிறது.

இதன்பிறகு மீண்டும் யோகிபாபுவின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. இதனைத் தொடர்ந்து யோகிபாபு தனது காரை கண்டுபிடித்தாரா? மீண்டும் அதிர்ஷ்டத்தை மீட்டெடுத்தாரா என்பது மீதிக்கதை.

யோகி பாபுவுக்கு இந்த படத்தில் காமெடி, குணச்சித்திரம் என இரண்டு முகங்களையும் காட்டும் கதாபாத்திரம். இரண்டையுமே அழகாக பேலன்ஸ் செய்து நடித்துள்ளார். குறிப்பாக மண்டேலா படத்திற்குப் பிறகு மீண்டும் அழுத்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார் யோகி பாபு.

இவருக்கு மனைவியாக நடித்துள்ள ரேச்சல் ரெபேக்காவும் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் யோகிபாபு உடனான இவரது பிரிவு தான் படம் நெடுகிலும் நமக்கு ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது.

யோகி பாபுவின் நண்பனாக நடித்துள்ள அப்துல் லீ இப்படி நமக்கு ஒரு நண்பன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைக்க வைக்கிறார். அந்த அளவிற்கு அவரது நடிப்பும் எதார்த்தமாக இருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வீராவும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

இடைவேளை வரை எப்படி யோகி பாபுவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது லக்கி மேனாக மாறப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருப்பதால் படம் விறுவிறுப்பாக நகர்ந்து விடுகிறது. இடைவேளைக்குப் பிறகுதான் கதையை கொண்டு செல்வதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். அது ஒன்றும் அவ்வளவு பெரிய குறை அல்ல.. மற்றபடி இந்த படத்தை மனம் விட்டுப் பார்த்து ரசித்து சிரிக்கலாம்.