மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மாவீரன்.
மிகவும் பயந்தாங்கோலியாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு தினசரி பத்திரிகையில் சேர்ந்து தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு தொடர் போல் மாவீரன் என்ற ஒரு படக்கதை தொடரை அந்த பத்திரிகையில் வரைந்து எழுதுகிறார். இதனிடையே கூவம் நதி ஓரம் குடிசை போட்டு வசித்துக் கொண்டிருக்கும் நாயகனின் குடும்பத்தை அங்கிருந்து காலி செய்து விட்டு ஒரு பெரிய ஹவுசிங் போர்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறச் செய்கிறார் குடிசை மாற்று வாரிய அமைச்சர் மிஷ்கின்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் தரமற்ற நிலையில் கட்டித் தரப்படுகிறது. எந்த சுவரும் சரியில்லாமல் இடிந்து இடிந்து விழுகிறது. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் சிவகார்த்திகேயன் ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு திடீரென ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அந்தப் பிரச்சினையுடன் அவர் எப்படி அமைச்சரை எதிர்கொண்டார், மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதே மாவீரன் படத்தின் மீதிக் கதை.
கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் குரல் கேட்டு எதிரிகளை துவம்சம் செய்வது மாஸ். இறுதியில் மாவீரனாக மாறி மக்களை காப்பாற்றுவது எல்லாம் அருமை. சிவகார்த்திகேயன் அந்த கதாப்பாத்திரமாகவே வாழந்துள்ளார். வில்லனாக மிரட்டியுள்ளார் மிஷ்கின், அதிதி ஷங்கர், சரிதா, சுனில் என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். யோகிபாபுவின் காமெடியும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
பரத் ஷங்கரின் இசையும், விது அய்யனாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் மடோன் அஸ்வின் ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சமூக அவலத்தை கமர்ஷியல் படமாக கொடுக்க முயன்று அதில் ஜெயித்திருக்கிறார்.