பாபா பிளாக் ஷீப் ; விமர்சனம்

நகரத்தில் ஆண்கள் பள்ளி, இருபாலர் பள்ளி என ஒரே இடத்தில் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார் அதன் நிர்வாகி. அவரது மரணத்துக்கு பிறகு இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக இணைத்து விடுகின்றனர். ஆண்கள் பள்ளியை சேர்ந்த அயாஸும், இருபாலர் பள்ளியை சேர்ந்த நரேந்திர பிரசாத்தும் வகுப்பில் கடைசி பெஞ்ச் எங்களுக்குதான் என எந்நேரமும் மோதிக் கொள்கிறார்கள்.

சில போட்டிகளை நடத்தி அதில் யார் முதலிடம் பெறுகிறார்களோ அவர்களுக்குதான் கடைசி பெஞ்ச் என்று பந்தயமும் கட்டுகிறார்கள். இந்த நிலையில் அம்மு அபிராமியிடம் ஒரு மாணவன் எழுதிய கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில் பெயர் குறிப்பிடாத மாணவன் தன் பிறந்தநாளில் தற்கொலை செய்துகொள்ளப் போகும் தகவல் இருக்கிறது

கடிதத்தை படித்து பதறும் மாணவர்கள் தற்கொலையை தடுத்தார்களா? மாணவர்களிடையே இருந்த பகைமை மறைந்ததா? என்பது மீதி கதை.

அயாஸ், நரேந்திர பிரசாத் இருவரும் நாயகன் வேடத்துக்கு கச்சிதமாக இருக்கிறார்கள். மாணவர்களிடையே இருக்கும் நக்கல், குறும்பு, பகை என பருவக்கோளறால் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அம்மு அபிராமி ஒரு மாணவியாக பொருந்தி போகிறார். போஸ் வெங்கட் ஒரு சராசரி அப்பாவை கண் முன் நிறுத்துகிறார. அபிராமி சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

மாணவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு தற்கொலை அல்ல என்ற விஷயத்தை காட்சிகள் மூலம் சொல்லாமல் வசனம் மூலம் கடத்த முயற்சித்து உள்ளார் அறிமுக இயக்குனர் ராஜ்மோகன். ஆழமாக பேச வேண்டிய ஒரு விஷயத்தை மேம்போக்காக கையாண்டுள்ளார் டைரக்டர்.

அதனால் சரியான நோக்கம் இருந்தும் வலுவான காட்சி அமைப்பு இல்லாததால் ஒரு சராசரி காமெடி படமாக இருக்கிறது பாபா ப்ளாக் ஷீப்.