பம்பர் ; விமர்சனம்

ஜூவி,எட்டு தோட்டாக்கள் என தனது வித்தியாசமான கதை தேர்வால் ரசிகர்களை ஈர்த்து வரும் வெற்றியின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் “பம்பர்”.

தூத்துக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து சின்னச்சின்ன திருட்டுக்களை செய்து அடிக்கடி சிறை சென்று வருபவர் வெற்றி. அத்தை மகள் ஷிவானியை திருமணம் செய்ய ஆசை தான் என்றாலும் பணம் இல்லாதவன், திருடன் என்கிற குறை பெரிதாக நிற்கிறது. இதனால் நண்பர்கள் நால்வரும் ஏதாவது பெரிய சம்பவமாக செய்து பணத்தைப் பெற்றுக்கொண்டு செட்டில் ஆகலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எடுத்த முடிவு தவறாக போக, புதிதாக தூத்துக்குடிக்கு வரும் போலீஸ் அதிகாரி இவர்களை வேட்டையாடி ஜெயிலில் தள்ள நினைக்கிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக சபரிமலைக்கு மாலை போடுகிறார்கள். அப்படி சபரிமலை கோவிலுக்கு போகும்போது அங்கே லாட்டரி டிக்கெட் விற்கும் இஸ்லாமியரான ஹரிஷ் பெராடியிடம் 10 கோடி பரிசு விழுகின்ற பம்பர் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்குகிறார் வெற்றி.

சில நாட்கள் கழித்து அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி பரிசு விழுகிறது. ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக அதை விற்றவரான ஹரீஷ் பெராடியிடமே அந்த லாட்டரி டிக்கெட் இருக்கிறது இதை அறிந்த ஹரீஷ் பெராடியின் குடும்பமே அந்த பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அவரிடம் வற்புறுத்துகிறார்கள்.

ஆனாலும் அதை வெற்றியிடம் சேர்ப்பதற்காக தூத்துக்குடிக்கு கிளம்புகிறார் ஹரீஷ் பெராடி. வெற்றிக்கு விற்கப்பட்ட லாட்டரி டிக்கெட் எப்படி இடம் வந்தது ? ஆள் அட்ரஸ் எதுவும் தெரியாமல் வெற்றியைத் தேடி தூத்துக்குடிக்கு சென்ற ஹரீஷ் பெராடியால் அவரை கண்டுபிடிக்க முடிந்ததா ? அந்த பணம் யாருக்கு கடைசியில் சொந்தமானது என்பதுதான் மீதிக்கதை.

பொதுவாகவே வித்தியாசமான கதையை தேர்வு செய்வதில் வல்லவரான வெற்றிக்கு இப்படமும் அதே போன்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறது. தூத்துக்குடியில் ரவுடியாக சுற்றி தெரியும் இளைஞன் வேடத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது இவருடைய முகம். சபரிமலைக்கு சென்று திரும்பும் இவருக்கு ஏற்படும் திருப்பத்தால் வேறொரு நபராக மாறும் அந்த வித்தியாசத்தையும் தன் நடிப்பின் மூலம் அசத்தலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியான ஷிவானிக்கு தன் நடிப்பை நிரூபிக்க இப்படம் உதவி இருக்கிறது. முதியவராக வரும் ஹரிஷின் எதார்த்தமான நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. ஜி.பி முத்துவின் சில காமெடிகள் ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி இருப்பது சிறப்பு.

ஒரு லாட்டரி டிக்கெட் டிக்கெட்டை மையமாக வைத்துக் கொண்டு திரைக்கதையை அவ்வளவு சுவாரசியமாகவும், எதார்த்தமாகவும், எமோஷனலாகவும் எழுதி வியக்க வைக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

ஒரு சாதாரண கதையை வைத்துக் கொண்டு அதற்குள் பல சுவாரசியமான விஷயங்களையும் ஆங்காங்கே மனிதத்தை வெளிப்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும், வைத்து திரையரங்கிற்கு வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்.