முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் (மலையாளம்) ; விமர்சனம்

சட்டம் படித்த வினீத் சீனிவாசன், சாதாரண மரத்தடி வக்கீலாகவே தனது வாழ்க்கை முடிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். ஜூனியராக இருந்து தனது தனித்துவத்தை வெளிப்படுத்த முயற்சிக்க நினைக்கையில் எல்லாம் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கிடையே தனது தாயை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர்கள் கேட்ட பணத்தை செலுத்த முடியாமல் இயலாமையில் தவிக்கிறார்.

அந்த சமயத்தில் அங்கே ஏஜென்ட் ஒருவர், விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் மூலமாக சிகிச்சையை இலவசமாக பெற்றுத்தருவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் பணமும் தந்து உதவுவதை பார்க்கிறார். தனது தாயின் மருத்துவ செலவையும் அதேவழியில் சென்று சமாளிக்கிறார். அதேசமயம் இப்படி செய்வதன் மூலம் அந்த ஏஜென்ட், அவருக்கு மூளையாக இருந்து அதை செயல்படுத்தும் இன்னொரு வக்கீலான சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இதன்மூலம் சட்ட ரீதியாகவே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதை பார்த்து, தான் இனி போகவேண்டிய பாதை இதுதான் என தீர்மானிக்கிறார்.

ஆனால் இந்த விஷயத்திலே பழம்தின்று கொட்டைபோட்ட சுராஜ் வெஞ்சாரமூடுவை மீறி அவரால் எளிதில் உள்ளே நுழைய முடியவில்லை. அதைத்தொடர்ந்து அவரது வக்கீல் மூளை கிரிமினலாக யோசிக்க தொடங்குகிறது.. அவரால் சுராஜ் வெஞ்சாரமூடுவை தாண்டி இந்த விவகாரத்தில் உள்ளே நுழைய முடிந்ததா ? நுழைவதற்காக அவர் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்கிறார் ? அதனால் எதிர்வரும் தடைகளை மீறி இந்த விஷயத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததா ? இதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பதுதான் மீதிப்படம்.

35 வயதாகியும் திருமணமாகாத, அதேசமயம் எப்படியாவது ஒரு வசதியான எதிர்காலத்தை இப்போதிருந்தே தனக்கு அமைத்துக்கொள்ள வேண்டும் என துடிக்கும் அந்த இளம் வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு வினீத் சீனிவாசனை தவிர யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை.. அந்த அளவிற்கு படம் ஆரம்பித்தது முதல் துவங்கியது வரை மனிதர் பவுண்டரியும் சிக்சரும் ஆக விளாசித் தள்ளுகிறார்.
கண்முன்னே ஒருவன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எளிதாக சம்பாதிக்கும் முறையை நேரில் பார்த்தபின் அதில் நுழைவதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும் அப்படி போராடி கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் எந்த எல்லைக்கு செல்கிறார் என்பதும் கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல், நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கின்றன.

அவரது போட்டியாளராக வரும் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இந்தப் படத்திலும் வழக்கம்போல தனது சீரியஸ் நடிப்பால் மிரட்டினாலும் இந்த படம் டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருப்பதால் வினித் சீனிவாசன், சுராஜ் இருவருமே செய்யும் செயல்கள் அனைத்திலும் ஒரு மெல்லிய நகைச்சுவை படம் நெடுகிலும் இழையோடிக் கொண்டே இருக்கிறது. சுராஜின் முடிவுதான் கொஞ்சம் பரிதாபப்படவும் வைக்கிறது.

வினீத் சீனிவாசன் தனது திட்டங்களுக்கு எல்லாம் உதவியாக பயன்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடிகர் சுதி கோப்பா கச்சிதமாக பொருந்தி உள்ளார். ஒரு கட்டத்தில் வினீத் சீனிவாசனை தாண்டி தானும் மேலே ஏற நினைக்கும்போது அதை வினீத் டீல் செய்யும் விதம் பகீர் என்கிறது.

வினித் சீனிவாசனின் முன்னாள் காதலியாக தன்வி ராம் மற்றும் பின்னாள் காதலியாக ஆர்ஷா சாந்தினி பைஜூ என இருவர் நடித்திருந்தாலும் சாந்தினி பைஜூ தனது அழகாலும் க்யூட்டான நடிப்பாலும் நம் மனதை கவர்கிறார். அதுமட்டுமல்ல ஜாடிக்கேத்த மூடி போல வினீத் சீனிவாசன் போலவே அவர் யோசிக்கும் காட்சிகளெல்லாம் சிரிப்பையும் வரவழைத்து அவருக்கு கைதட்டலையும் பெற்றுக் கொடுக்கின்றன.

இவர்கள் தவிர இன்சூரன்ஸ் பணத்துக்காக நோயாளிகளை கேன்வாஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஏஜென்ட், அதற்கு ஒப்புதல் தரும் மருத்துவர், இதற்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரி, இன்சூரன்ஸ் அதிகாரி, வினீத்தின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்து பல்பு வாங்கும் அந்த இளம் டாக்டர் என பல கதாபாத்திரங்களும் தங்களது எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

என்னதான் சிரித்துக்கொண்டே படம் பார்த்தாலும் சிபி மேத்யூ அலெக்ஸின் பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுவதுடன் நம்மை கொஞ்சம் பதட்டத்திலேயே படம் முழுக்க பயணிக்கவும் வைக்கிறது.

இந்த படத்தை அபினவ் சுந்தர் நாயக் இயக்கியுள்ளார். விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மிகப்பெரிய மருத்துவமனைக்கு வருபவர்களிடம் இன்ஷூரன்ஸ் என்கிற விஷயத்தை தூண்டிலாக பயன்படுத்தி இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றதா என்பதை டீடைலாக விவரித்துள்ளார். குறிப்பாக டார்க் காமெடி படம் என்பதால், படத்தில் ஒரு சில கதாபாத்திரங்கள் மரணத்தை தழுவும்போது அது கூட நம்மை சிரிக்க வைப்பதாகவும் சாதாரணமாக கடந்துபோக செய்வதாகவும் என தான் எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகவே செய்து முடித்துள்ளார் இயக்குனர் அபினவ்.

தனக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக வினீத் சீனிவாசன் எடுக்கும் முயற்சிகள் பற்றி இவர் காட்சிகளை யோசித்த விதம் குறித்து நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக வினீத் பாம்பை வளர்த்துவருவதும் அதை சமயத்தில் பயன்படுத்திக்கொள்வதும் மிரட்டல் ரகம். வில்லத்தனம் கொண்ட ஹீரோ, அதேசமயம் அவரது செயல்களையெல்லாம் நியாயப்படுத்தி ரசிகர்களை அவருக்கு ஆதரவாக திசைதிருப்பும் முயற்சியிலும் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.