கடந்த 2018 ஆம் வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கியது இதை மையப்படுத்தி இந்த நிகழ்வில் உண்மையில் என்ன நடந்தது, எதற்காக நடந்தது, இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதையெல்லாம் அலசி முத்துநகர் படுகொலை என்கிற பெயரில் ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் எம் எஸ் ராஜ்.
இதற்கு முன்பும் மெரினா புரட்சி நடைபெற்ற சமயத்தில் கடைசி நாள் போராட்டத்தில் எதிர்பாராத வன்முறை வெடித்தது அல்லவா ? அப்போதும் அந்த வன்முறை ஏன் நிகழ்ந்தது ? யாரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது ? என்பதை மையப்படுத்தி மெரினா புரட்சி என்கிற படத்தை இயக்கியவர் தான் இந்த இயக்குனர் எம்.எஸ் ராஜ்.
இது ஆவணப்படம் என்பதால் இதில் நடிப்பை தொழிலாக கொண்ட எந்த நடிகர்களும் நடிக்கவில்லை. தூத்துக்குடி போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்பை அழகாக கோர்த்து அதில் இது குறித்த தனது பயணத்தையும் இணைத்து கேள்விகளுடன் இந்த ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார் எம்எஸ் ராஜ்.
ஸ்டெர்லைட் ஆலையில் வெளியாகும் சாயக் கழிவுகளால் அந்த பகுதி மக்கள் உடல்ரீதியாக எப்படி பாதிப்புக்கு ஆளானார்கள், ஏன் அந்த ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் தொடங்கினார்கள் என்கிற காரணத்தை அந்த பகுதி மக்களிடம் இருந்து கேட்டுப் பெற்றுள்ளார் இயக்குனர். நூறாவது நாள் போராட்டத்திற்கு அழகாக திட்டமிட்டு அமைதியான முறையில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க போராட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் போராட்டம், இந்த போராட்டம் மட்டுமல்ல.. எந்த போராட்டமும் அதன் கடைசி நாளன்று வெற்றிகரமாக முடிந்து விடக்கூடாது என்பதில் அரசு எந்திரம் குறிப்பாக காவல்துறை கவனமாக இருப்பார்கள் என்பதும், அதனால் அவர்களாலேயே திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்பதும் இந்த முத்துநகர் படுகொலை சம்பவத்திலும் உண்மையாகி இருப்பதை அழுத்தமாகக் கூறியுள்ளார் இயக்குனர்.
இந்த படுகொலையில் பலியான குடும்பத்தார்களின் துயரம் நிறைந்த வாக்குமூலங்களும் இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்களாக மாறிய சிலரின் விரக்தியான பேச்சுக்களையும் பார்க்கும்போது, பார்ப்பவரை நிச்சயமாக கண்கலங்க வைக்கும்.
இதுபோன்ற நிகழ்வுகளை ஆவணப்படமாக எடுப்பதில் என்ன பிரயோஜனம் என பலர் கேட்கலாம். ஆனால் இவையெல்லாம் வரலாற்று பதிவுகள்.. வரலாற்று விவரங்கள்.. நாளை போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு முன்னெச்சரிக்கை தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.. அதே போல போராட்டம் நடத்துபவர்களை வன்முறை கொண்டு அடக்கிவிடலாம் என்கிற மனோபாவம் கொண்ட அதிகார வர்க்கத்தை இனி வரும் நாட்களில் கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும். அந்த வகையில் இந்த முத்துநகர் படுகொலை ஆவணப்படம் ரசிகர்களால் பொதுமக்களால் ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.