நெஞ்சுக்கு நீதி விமர்சனம்


ஹிந்தியில் ஆயுஷ்மான் ஹுரானா நடிப்பில், அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தியில் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு நியாயம் செய்திருக்கிறதா இந்த படம் ? பார்க்கலாம்.

நம் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் கூட இன்னும் பல இடங்களில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி பேசும் படம் தான் நெஞ்சுக்கு நீதி.
பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன கிராமத்தில் நடக்கிறது கதை. கிராமத்தில் உள்ள தலித் சிறுமிகள் மூவர் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு பேரின் உடல் கிடைக்கிறது. இன்னொரு சிறுமி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அந்த கிராமத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க்கும் உதயநிதி ஸ்டாலின் அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா? காணாமல் போன சிறுமி என்ன ஆனார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

இந்த படம் ஒரு ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். த்ரில்லர் கதையை, இங்கு சாதிய பாகுபாடுகள் எப்படி உள்ளது என்பதுடன் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்.

விஜயராகவன் என்னும் கதாப்பாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்முதலில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை சாதாரண படங்களில் நடித்த வந்த உதயநிதி மனிதன் படம் மூலம் தன் ரூட்டை மாற்றினார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அவர் நடிப்பில் மெருகேறி உள்ளார் என்றே சொல்லலாம். பிக்பாஸ் மூலம் மக்களிடம் ரியல் ஹீரோவான ஆரி அர்ஜுனன் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரி, உதயநிதி ஸ்டாலின் இவர்கள் இருவரின் நடிப்பும் நிச்சயம் மக்களை கவரும்.

உதயநிதியின் மனைவியாக தன்யா ரவிச்சந்திரன், காணாமல் போன தங்கைக்காக போராடும் ஷிவானி ராஜசேகர், சர்க்கிள் இன்ஸ்பெக்டராக சுரேஷ் சக்கரவர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் இளவரசு என அனைவரும் தனி கவனம் ஈர்க்கின்றனர்.

திபு நினன் இசையில் இரண்டு பாடல்கள், அதுவும் பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தி இருக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி சொல்லும் ஒரு நீதி – அனைவரும் சமம். யாரும் ராஜா அல்ல, யாரும் அடிமையும் அல்ல என்பதுதான்.