இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் நான் மிருகமாய் மாற.
தனது தம்பியை கொன்றவரை பழிவாங்க சென்று கூலிப்படை கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார் சசிகுமார். அவர்களிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே நான் மிருகமாய் மாற படத்தின் கதை.
வழக்கமாக திரையில் காட்டப்படும் சசிகுமாருக்கு அதிக சுமைகளை தாங்க வேண்டிய பொறுப்பு இத்திரைப்படம். முழுக்க முழுக்க சசிகுமாரை சுற்றியே கதை நகர்வதால் திரைக்கதையுடன் எளிதாக பயணிக்க முடிகிறது.
பழிவாங்கலில் ஈடுபடும்போது ஆக்ரோசம், மாட்டிக் கொண்டபோது ஏற்படும் பரிதவிப்பு, கொலை செய்யும் முயற்சியில் தடுமாற்றம், குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு என நடிப்பில் அசத்தியிருக்கிறார் சசிகுமார்.
மிகச்சிறிய அளவிலான கதாபாத்திரங்கள் வடிவமைப்பு படத்தின் திரைக்கதை பயணத்திற்கு உதவியுள்ளது. ஆக்ஷன் படங்கள் என்றாலே இடம்பெறும் அதீதிமான வசனங்கள் இல்லாமல் இருப்பது படத்திற்கு மற்றொரு பலம்
வில்லனாக வரும் விக்ராந்த்துக்கு அதீத காட்சிகள் இல்லை என்றாலும், க்ளோஷப் காட்சிகளிலேயே படம் முழுக்க பயணிக்கிறார். விக்ராந்த் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.
ஹரிப்ரியாவிற்கு நடிப்பதற்கான பெரிய காட்சிகள் இல்லையென்றாலும் அவ்வப்போது தோன்றுகிறார். அப்படியே ஒதுங்கிக் கொள்கிறார்.
அதேசமயம் க்ரைம் த்ரில்லர் வகையிலான இந்த கதைக்கு ஜிப்ரானின் பின்னணி இசை பலம். இரவுக் காட்சிகளில் அவரது பின்னணி இசை, காட்சிகளுடன் ஒன்றி செல்ல உதவியிருக்கிறது.
படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. வன்முறைக் காட்சிகள் இடம்பெறும் இடங்களிலெல்லாம் இரத்தம் தெறிக்கவிடப்பட்டிருக்கிறது. இரவு நேரக் காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
வழக்கமான பழிவாங்கல் தப்பித்தல் கதைதான் என்றாலும் அதனை சுவாரஸ்யமாக வழங்க இயக்குநர் முயன்றிருக்கிறார்.