நேற்று இந்த நேரம் – விமர்சனம்


நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில மோதல்கள் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார். அதுபற்றி போலீசில் புகார் அளிக்க, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார்.

மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘நேற்று இந்த நேரம்’.

ஷாரிக் ஹாசனுக்கு பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான வேடம்.அதைப் புரிந்து நடித்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.

நாயகி ஹரிதா படத்தில் வரக்கூடிய பல கதாபாத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.அதில் தன்னைத் தனித்துத் தெரிய வைக்க வேண்டும் என்று நினைத்து நடித்திருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஊட்டியின் பசுமையான இயற்கை காட்சிகளை கதைக்கு தேவையான காட்சி கோணங்களில் திறம்பட படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷால். கெவின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி ஸ்கோர் திரைக்கதை நகர்வுக்கு உதவுகிறது.

வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டுப் படமெடுக்கவேண்டும் என்று நினைத்து கதாநாயகன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பதும் படத்தைக் கொண்டு சென்றிருக்கும் விதமும் வரவேற்புக்குரியன. நடந்த ஒரு சம்பவத்தினை, அவரவர் பார்வையில் விவரிப்பது குறித்த திரைகதையை திறம்பட கையாண்டிருந்தாலும், காட்சிகளில் புதுமையில்லாதது சோர்வினை ஏற்படுத்துகிறது. ஒரே காட்சியை மறுபடியும் பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தி விடுகிறது. போதை மற்றும் நண்பர்கள் பிரச்சனையை ஒரு விழிப்புணர்வு பாடமாக கதை சொல்வதில் எடுத்த முயற்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் பாராட்டத்தக்கது.