பூமர் அங்கிள் – விமர்சனம்


உலகின் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் போன்றவர்களைப் போலவே இந்தியாவில் சக்திமான் என்று ஒரு சூப்பர் ஹீரோ இருந்தார் இல்லையா..? அவர்தான் இப்போது வயதாகி பூமர் அங்கிள் ஆகிவிட்டார்.

ரஷ்ய நாட்டுப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட யோகிபாபு, அவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறார். சுமூகமான விவகாரத்துக்கு மறுக்கும் ரஷ்ய நாட்டுப் பெண் சில நிபந்தனைகள விதிக்கிறார். அதாவது, யோகிபாபுவுக்கு சொந்தமான பூர்வீக அரண்மனைக்குச் சென்று, அங்கே சில நாட்கள் தங்கி வாழவேண்டும் என யோகிபாபுவை நிர்பந்திக்கிறார். அதற்கு சம்மதிக்கும் யோகிபாபுவும் சில நிபந்தனைகளை விதிக்கிறார். இதைப் பொருட்படுத்தாத அந்தப்பெண் அதை மீறுகிறார்.

இதற்கிடையே, அரண்மனைக்கு வரும் யோகி பாபுவை பழிவாங்க, அவரது பால்ய காலத்து நண்பர்களான சேசு, தங்கதுரை, பாலா ஆகியோர் முயற்சிக்கிறார்கள். இவர்களை பின் தொடர்ந்து, ஊர் தலைவர், ரோபோ சங்கரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார். இதன் பிறகு நடக்கும் கலாட்டா களேபரங்கள் தான், ‘பூமர் அங்கிள்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கம் போல் உடல் கேலி தொடர்பான வசனங்களை பேசி ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அவரது வசனங்களில் சில சிரிக்க வைத்தாலும், பல கடுப்பேற்றவே செய்கிறது.

மற்ற நடிகர்கள் அனைவருக்கும் கதையில் கொடுக்கப்பட்ட வேலையைக் காட்டிலும் இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அதில் அவர்களுக்குப் பாதிவெற்றி கிடைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபானி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, சிறுவர்களை கவர்வதற்கான பணியை தனது ஒளிப்பதிவு மூலம் சிறப்பாக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

மர்மங்கள் நிறைந்த அரண்மனை, அதில் நுழைபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியாக சொல்வது என்ற வழக்கமான பாணியிலான தில்லையின் எழுத்தில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களை சித்தரித்து, அதில் நம்ம ஊரு சக்திமானின் சோகக் கதையை நகைச்சுவையாக சொல்லி படத்தை வித்தியாசமான ரூட்டில் பயணிக்க வைவைத்திருக்கும் இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், சிறுவர்களை கவர்வதற்கான அம்சங்களை சேர்த்து படத்தை இயக்கியிருக்கிறார்.