ஹாட் ஸ்பாட் – விமர்சனம்


ஒரு கதைக்குள் நான்கு கதைகள் என்பது தமிழில் புதிதல்ல. அனால் இதில் ஒரு கதை நான்கு கதைகளின் தொகுப்பாக ஹாப்பி மேரிட் லைஃப், கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம் என்ற தலைப்பில் இயக்குனர் விவரிக்கிறார்.

முதல்கதையில் பெண்ணியம்,இரண்டாவது குழப்பமான காதல்கதை, மூன்றாவது ஆண் பாலியல் தொழிலாளி கதை, நான்காவது குழந்தைமையைப் பேணுதல் ஆகிய கருத்துகளைக் கொண்டிருக்கிறது.

தன்யா (கௌரி ஜி கிஷன்) மற்றும் விஜய் (ஆதித்யா பாஸ்கர்) இருவரும் காதலர்கள். தங்கள் காதலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கின்றனர். இதில் பெண் பார்க்கும் படலம் தொடங்கி திருமணம் செய்து கொண்டு பெண் புகுந்த வீட்டிற்கு சென்று வாழும் வரை எப்படிப்பட்ட மனநிலை, சூழ்நிலை இருக்கிறது அதை ஆண்கள் அனுபவித்தால் என்ன நடக்கும் என்பதை விஜய் எண்ணுவது போலவும், அதன் பின் விஜய்; எடுக்கும் முடிவு என்ன? பெற்றோர்கள் இந்த வித்தியாசமான முடிவுக்கு சம்மதித்தார்களா? என்பதைச் சொல்வதே ஹாப்பி மேரிட் லைஃப்

இரண்டாவது கதையில், சாண்டி -அம்முஅபிராமி ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள்.காதலர்களாக இருப்பவர்களுக்கு எதிர்பாரா சிக்கல்.அதை எப்படி எதிர்கொள்வது? என்பது எழுதியவருக்கும் புரியவில்லை பார்ப்போருக்கும் புரியவில்லை.தங்கள் நடிப்பின் மூலம் வரவேற்புப் பெறுகிறார்கள்.

மூன்றாவது கதையில் சுபாஷ் – ஜனனி நடித்திருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண் பாலியல் தொழிலாளியாக மாறும் சுபாஷ், தனது காதலி ஜனனிக்கு விசயம் தெரிந்தவுடன், அது காமம், உன்னிடம் மட்டும் தான் காதல், என்று சொல்வதும், அதற்கு ஜனனி பதிலடியாக எடுக்கும் அதிரடி முடிவு

தொலைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் கொடுமைகளை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது. சிறுவர்களை பணியில் அமர்த்தினால் குற்றம் என்று சொல்லும் சட்டம், இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவர்களை நடிக்க வைப்பதோடு, வயதுக்கு மீறிய காட்சிகள் மற்றும் வசனங்களில் நடிக்க வைத்து கொடுமைப்படுத்துவதை ஏன் கேட்பதில்லை? என்ற கேள்வியை முன் வைத்திருக்கும் நான்காவது கதை

இந்த நான்கு வெவ்வேறு கதைகளில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே, தங்களது கதாபாத்திரத் தன்மையினை உணர்ந்து, சிறப்பாக நடித்துள்ளனர். கௌரி ஜி. கிஷன் – தன்யா, ஆதித்யா பாஸ்கர் – விஜய் ஆரம்ப கதையே படத்தை பார்க்க நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. இதில் இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

சாண்டி – சித்தார்த், அம்மு அபிராமி – தீப்தி இந்த ஜோடிகள் சந்திக்கும் அதிர்ச்சிகரமான தருணங்கள் காதல்பெற்றோர்களை சிந்திக்க வைக்கிறது.

ஜனனி – அனிதா , சுபாஷ் – வெற்றி இருவரின் காதல் வித்தியாசமான கோணத்தில் பயணித்திருக்கிறது.

கலையரசன் – ஏழுமலை, சோஃபியா – லக்ஷ்மி என்று தங்களுக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளனர்

கோகுல்பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.நான்கு கதைகள் என்பதால் அவற்றை ஒளியமைப்புகளிலும் வேறுபடுத்திக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.

சதீஷ் ரகுநாதன், வான் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.இரண்டு பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன

“நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் அவற்றின் எதிர்மறையான தாக்கத்தை அறியாமலேயே நடக்கின்றன. அடிப்படை விஷயங்களில் பொதுவாக நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை; மாறாக, நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம். பின்விளைவுகள் நம்மைப் பாதிக்கும்போது தான் உணர்தல் நம்மைத் தாக்கும். இந்த முக்கிய யோசனையைச் சுற்றியே சுழலும் திரைக்கதையில் இதுவரை பேசப்படாத விஷயங்களை வெளிப்படையாக, அழுத்தமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.