பணக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி தன் தாய்க்காக பிசைக்காரனாக மாறும் பிச்சைகாரன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே 7வது பெரும் பணக்காரர் விஜய் ஆண்டனி. அவர் தன்னுடைய நண்பர் தேவ் கில், ஆடிட்டர் ஜான் விஜய், குடும்ப மருத்துவர் ஹரிஷ் பெரேடி ஆகியோரை மட்டும் நம்புகிறார். ஆனால் அவர்கள் விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அதற்காக மூளை மாற்று அறுவை சிகிச்சை முறையை தேர்வு செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தார்களா? யாருடைய மூளையை பணக்காரர் விஜய் ஆண்டனிக்கு மாற்றினர்? அவர் யார்? சதி திட்டம் நிறைவேறியதா? இறுதியில் என்ன ஆனது என்பதே பிச்சைக்காரன்-2.
விஜய் ஆண்டனி எப்போதும் போல் வழக்கமான நடிப்பை இப்படத்திலும் வெளிப்படுத்தி அதையும் நிறைவாகச் செய்திருக்கிறார். இதில் நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டராகவும் இருந்து படத்தை தனி ஒரு மனிதனாக தூண் போல் தாங்கி நின்று எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஹீரோயின் காவ்யா தாப்பர் நடிப்பு ஓகே. தேவ், ராதாரவி, யோகி பாபு ஆகிய மூவரும் கொடுத்ததை கட்சிதமாக செய்துள்ளனர்.
முதலில் இது ஒரு நம்ப முடியாத கதை என்றாலும் இது ஒரு வித்தியாசமான முயற்சி. அந்த வித்தியாசமான முயற்சிக்காகவே இந்த படத்தை காணலாம். அந்த அளவு முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும், செண்டிமெண்ட் நிறைந்த அழுத்தமான காட்சி அமைப்புகளும் இந்தப் படத்திலும் அமைந்து அந்த வித்தியாசமான முயற்சியையும் சேர்த்து நம்மை ரசிக்க வைத்துள்ளது. முதல் பாதி முழுவதும் விஜய் ஆண்டனியின் ஃபிளாஷ்பேக் மற்றும் உருக வைக்கும் சென்டிமென்ட் காட்சிகள் பின் இடைவேளையில் நடக்கும் அதிரடி ட்விஸ்ட் என வேகமாகவும் அதேசமயம் உருக்கமாகவும் நகர்கிறது.
பின் இரண்டாம் பாதி படம் விஜய் ஆண்டனி எடுக்கும் அதிரடி முடிவுகள் அதன்பின் வரும் கிளை கதைகள், எதிரிகளின் சதிகளை முறியடிக்கும் படியான திரைக்கதை என படம் சில வேகத்தடைகளுடன் நகர்ந்து இறுதியில் உருக வைக்கும் காட்சியோடு முடிவடைந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நாம் இதுவரை தமிழ் சினிமாவில் எவ்வளவோ ஆள் மாறாட்ட கதைகளை பார்த்திருப்போம். அந்த வகையில் இதுவும் ஒரு ஆள் மாறாட்ட கதை. ஆனால் அதை சிறப்பாக எடுத்து சென்றுள்ளனர், அதற்காகவே பிச்சைக்காரன் 2 படத்தை பார்க்கலாம்.