யாதும் ஊரே யாவரும் கேளிர் ; விமர்சனம்

இலங்கையில் இருந்து வரும் தமிழ் அகதிகளை பற்றி பேசுகிறது யாதும் ஊரே யாவரும் கேளிர்.

விஜய் சேதுபதி இலங்கை தமிழர். இசையில் ஆர்வம் உள்ளவர். சிங்கள ராணுவ தாக்குதலில் தப்பி அகதியாக இந்தியா வருகிறார். கேரளாவில் இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்கிறார். ஒரு கட்டத்தில் தமிழகத்துக்கு வரும்போது அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீஸ் கைது செய்கிறது.

விஜய்சேதுபதியை லாக்கப்பில் இருந்து வெளியே அழைத்து வரும் இன்னொரு இலங்கை தமிழரான கரு பழனியப்பன் அவருக்கு கிருபாநிதி என்ற பெயரையும் அதற்குரிய ஆவணங்களையும் கொடுத்து அந்த பெயரில் அகதி முகாமில் தங்க அரசுக்கு விண்ணப்பிக்கும்படி கூறுகிறார். அதுவே ஆபத்தாக மாறுகிறது. விஜய்சேதுபதியை தீர்த்து கட்ட போலீஸ் அதிகாரி மகிழ் திருமேனி தேடி அலைகிறார்.

இன்னொரு புறம் விஜய்சேதுபதியை ஒரு தலையாக காதலிக்கும் மேகா ஆகாஷ் அவரை லண்டன் இசைபோட்டியில் பங்கேற்க வைக்க முயற்சி செய்கிறார். கிருபாநிதி யார்? எதற்காக விஜய்சேதுபதியை மகிழ் திருமேனி கொலை செய்ய துடிக்கிறார். லண்டன் இசை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற விஜய்சேதுபதி கனவு பலித்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

விஜய்சேதுபதிக்கு அகதி என்ற அழுத்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்து இருக்கிறார். சாந்தமான முகம், அன்பான பேச்சு, சத்தங்களை கேட்டு நிலை குலைதல், தனக்குரிய அடையாளம் தேடி அலைதல் என்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மகிழ் திருமேனி மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து விஜய்சேதுபதியை கொல்ல வெறித்தனம் காட்டுகிறார். சின்னி ஜெயந்த் சிறிது நேரம் வந்தாலும் அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். மறைந்த நடிகர் விவேக் குணசித்திர நடிப்பால் கவனம் பெறுகிறார். மோகன்ராஜா, கரு பழனியப்பன், ராஜேஷ், கனிகா, தபியா மதுரா, ரித்விகா, இமான் அண்ணாச்சி, அஜய்ரத்னம், சம்பத்ராம் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி கதை விறுவிறுப்பாக செல்கிறது.

இலங்கை தமிழ் அகதிகளின் போராட்டங்களை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.