இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராயர் பரம்பரை.
கோவை பகுதியில் உள்ள கிராமத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் வலம் வருகிறார் ராயர் என்கிற ஆனந்தராஜ். அவரது தங்கை கஸ்தூரி காதல் திருமணம் என வீட்டை எதிர்த்து ஓடிப் போய்விட, தனது மகளுக்கும் அதே போல காதலித்து தான் திருமணம் நடக்கும் என ஜோசியர் கூறி விட, அதை தடுப்பதற்காக மகளின் கல்லூரி படிப்பையே கூட பாதியில் நிறுத்துகிறார் ஆனந்தராஜ்.
இன்னொரு பக்கம் அந்த ஊரில் பாட்டு கிளாஸ் சொல்லிக் கொடுக்கும் நபராக தங்கி இருக்கிறார் கிருஷ்ணா. இவருக்கும் ஆனந்தராஜின் மகளுக்கும் கீரியும் பாம்பும் போல தான் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்மகள் யாரையோ காதலிக்கிறாள் என்பதாக நினைத்துக் கொண்டு தனது கையாளான மொட்ட ராஜேந்திரன் மூலமாக அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் ஆனந்தராஜ்.
அவருக்கு துணையாக கூடவே கிருஷ்ணாவும் பயணிக்கிறார். ஆனால் ஆனந்தராஜ் மகள் யாரை காதலிக்கிறாள் என்பது தெரிய வரும்போது, ‘அட’ என்று மொட்ட ராஜேந்திரன் மட்டுமல்ல நாமும் கூட ஆச்சரியப்பட்டு போகிறோம்.
அவரது காதலன் யார், இறுதியில் அவர்கள் காதல் திருமணம் நடந்ததா, இல்லை ஆனந்தராஜ் அதை தடுத்தாரா என்பது கிளைமாக்ஸ்.
காதல் பிடிக்காத நாயகனாக கிருஷ்ணா நடித்திருக்கிறார்.துள்ளலும் துடிப்புமாக நடிப்பதில் தேர்ந்த அவருக்கேற்ற கதாபாத்திரம். அதை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார். நாயகிகள் அவரைத் துரத்தும்போது சிங்கிள்ஸ் பசங்களின் சாபத்தைப் பெறுவார் என்பதில் அய்யமில்லை.
கிருத்திகா, அன்ஷுலா மற்றும் சரண்யா ஆகியோர் நாயகிகள். மூவரில் நாயகன் யாரைக் காதலித்துக் கைப்பிடிக்கப்போகிறார் என்பதை யூகிக்கூடிய திரைக்கதைதான் என்பதால் மற்ற நாயகிகள் வரும் காட்சிகள் எளிதாகக் கடந்து போகின்றன.
தலைப்பில் இருக்கும் ராயராக நடித்திருக்கிறார் ஆனந்தராஜ். ஊர்ப்பெருமையையும் தன் பெருமையையும் ஒருசேரக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் செய்யும் செயல்கள் சிரிக்க வைக்கின்றன.
நாயகனின் நண்பராக வரும் கல்லூரி வினோத், காதலர்களைப் பிரிக்கவே கட்சி நடத்தும் மொட்டைஇராசேந்திரன், தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைப்பதற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கங்கே சிரிக்கவும் வைக்கிறார்கள்.
காமெடியை வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்திருந்தாலும் கதைக்களத்தில் முக்கியத்துவத்தை கொடுத்திருக்கலாம்.