இன்ஃபினிட்டி ; விமர்சனம்

இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில், நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் த்ரில்லர் படமாக வெளியாகி உள்ளது இன்ஃபினிட்டி.

நகரில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஒரு பக்கம் தன் மகள் காணாமல் போய்விட்டார் என புகார் கொடுக்க வரும் தம்பதி. இன்னொரு பக்கம் அதை விசாரிக்க வேண்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மறுநாளே மர்மமாக கொல்லப்படுகிறார். இதையெல்லாம் விசாரிக்க சிபிஐ தரப்பிலிருந்து நியமிக்கப்படுகிறார் நட்டி நட்ராஜ்.

ஒவ்வொரு தடயங்களாக கண்டுபிடித்து அவர் முன்னேற அவரையே போட்டுத் தள்ள முயல்கிறது ஒரு கூட்டம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இறுதியில் தெரிய வரும்போது ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்குமே அதிர்ச்சி தான்.

எதற்காக இந்த கொலைகள், இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, சில திருப்பங்கள் என கலந்துகட்டி சொல்லி இருக்கிறார்கள்.

சி.பி.ஐ. அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் நட்ராஜ். குற்றவாளிகளை விசாரிக்கும் தோரணை, வழக்கை முடிப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என அனைத்தும் கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறது. மொத்தத்தில் வழக்கமான நட்ராஜாக இல்லாமல் கதாபாத்திரம் அறிந்து அபாரமாக நடித்துள்ளார்.

டாக்டராக வரும் வித்யா பிரதீப் அழகாலும், அளவான நடிப்பாலும் மனதைத் தொடுகிறார். அவருடைய இன்னொரு முகம் பகீர் ரகம். கிளைமாக்ஸ் காட்சியில் சண்டையும் போட தெரியும் என அதிலும் ஒரு கை பார்ப்பது சிறப்பு.

காவலராக வரும் முனீஸ்காந்த் சிரிக்க வைக்கிறார். நட்ராஜின் நண்பராக வரும் முருகானந்தம், இளம்பெண்ணின் அப்பாவாக வரும் ஜீவா ரவி, அம்மாவாக வரும் மோனா பேடர், நிகிதா, ஆதவன், சிந்துஜா என அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள்.

சரவணன் ஸ்ரீயின் ஒளிப்பதிவும், பாலசுப்ரமணியனின் இசையும் படத்திற்கு பலம்.

சி.பி.ஐ. விசாரணைகள், கூடவே பயணிக்கும் குற்றவாளிகளின் கதை என திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய் கார்த்திக்.