பள்ளி மாணவர்களை வைத்து உருவாகியுள்ள மற்றும் ஒரு படம் எளிதில் கடந்துபோக முடியாத ஒரு படம். அதேசமயம் வழக்கமான மாணவர்களின் காதல் கதை என அளக்காமல் கொஞ்சம் புதிதாக யோசித்து இருக்கிறார்கள்.
வடசென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கும் மாணவன் ஹமரேஷ். அப்பா ஆடுகளம் முருகதாஸ் சலவை தொழிலாளி. மகனின் நண்பர்கள் சேர்க்கை சரியில்லாததால் கான்வென்ட் பள்ளிக்கு மாற்றி கஷ்டப்பட்டு பணம் கட்டி சேர்த்து விடுகிறார். தான் படித்த பள்ளியில் இருந்து திடீரென இப்படி மாற்றப்பட்டதால் இங்கு இருக்கும் மாணவர்களுடன் ஹமாரேஷால் எளிதாக பொருந்த முடியவில்லை.
அது மட்டுமல்ல, கான்வென்ட் மாணவர்கள் அவரை லோக்கல் என கிண்டலடிப்பது அவருக்கு இன்னும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அந்த வகுப்பில் படிக்கும் மாணவியான பிரார்த்தனா மீது உருவான காதல் தான். ஆனால் மன அழுத்தம் மற்றும் காதல் ஆகியவற்றால் படிப்பில் கவனம் செலுத்தாமல் கோட்டை விடுகிறார் ஹமாரேஷ்.
தந்தை கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படிக்க வைப்பதை பார்த்து மீண்டும் நான் படித்த கார்ப்பரேஷன் பள்ளிக்கே சென்று விட முடிவு செய்கிறார் ஹமரேஷ். பெற்றோரின் பிடிவாதம், தனது காதல் இதையெல்லாம் மனதில் வைத்து இறுதியில் ஹமரேஷ் என்ன முடிவு எடுக்கிறார் என்பது மீதிக்கதை.
பிளஸ் ஒன் மாணவனாக நடித்துள்ள ஹமரேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு என நிரூபித்துள்ளார். குறிப்பாக கார்ப்பரேஷன் பள்ளியில் புள்ளிமானாய் துள்ளி ஒடுவதும் கான்வென்ட் பள்ளிக்கு வந்தபின் தாமரை இல்லை தண்ணீராக மாறிவிடுவதும் என இரண்டு விதமான மனநிலைகளையும் தனது முகபாவத்தில் அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.
அதேபோல பார்ப்பதற்கு சின்னப்பெண் போல தோன்றினாலும் தனது விதவிதமான எக்ஸ்பிரஸ்களால் க்யூட்டாக நம்மை கவர்கிறார் நாயகி பிரார்த்தனா.
வரும் காட்சிகளில் எல்லாம் சென்டிமென்ட்டை பிழிந்துள்ளார் ஆடுகளம் முருகதாஸ். ஹ்மறேஷின் அம்மாவாக நடித்துள்ள சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்காவாக நடித்துள்ள அக்ஷயா ஹரிஹரன் இருவரும் அந்த வட சென்னை ஏரியா சலவைத் தொழிலாளிகளாகவே மாறி விட்டார்கள். இவர்களை எல்லாம் தாண்டி வட்டிக்கு பணம் கொடுத்து உதவும் அந்த நபரின் பெருந்தன்மையும் பேச்சும் அணுகுமுறையும் படம் பார்க்கும் அனைவரையும் நிச்சயம் கவரும்.
வழக்கமான பள்ளி மாணவ மாணவிகளின் காதல் கதையை எடுத்து நம்மை போட்டு வதைக்காமல், இப்படி திடீரென பள்ளி மாறும் மாணவனின் மன அழுத்தம், எண்ண ஓட்டம் ஆகியவற்றையும் அதற்கான தீர்வு என்ன என்பதை நோக்கியும் இந்த படம் நகர்வதால் அப்பாடா என பெருமூச்சு விட முடிகிறது.
அதே சமயம் அடிக்கடி மாணவர்களின் மோதலையே காட்டிக் கொண்டிருப்பதும் கொஞ்சம் சலிப்பையை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் நல்ல படம்தான் என்கிற ஏரியாவில் இந்த படம் பாஸ் மார்க் வாங்கி விடுகிறது.