இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் மகேந்திரன், காவியா அறிவுமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ரிப்பப்பரி
நண்பர்களுடன் சேர்ந்து குக்கிங் வீடியோ தொடர்பான யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருபவர் மகேந்திரன். அந்த சேனல் மூலமாக பழக்கமாகும் ஆரத்தியை காதலிக்கிறார். ஆரத்தின் காதலை பெறுவதற்காக அவரை தேடி அவர் இருக்கும் கிராமத்திற்கு நண்பர்களுடன் செல்கிறார் மகேந்திரன். ஆனால் ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் காதலர்களில் ஆண்களை மட்டும் பழிவாங்கும் பேய் ஒன்று தொடர் கொலைகளை செய்து வருவதும் அவரது தங்கையை தான் மகேந்திரன் காதலித்து வருகிறார் என்பதும் தெரிய வருகிறது.
இந்த ஜாதி மாற்று திருமணத்திற்கு அந்த அண்ணன் பேய் ஒப்புக்கொண்டதா ? இல்லை மகேந்திரனையும் பலி கேட்டதா ? எதற்காக ஜாதி மாற்றி திருமணம் செய்பவர்களை அந்த அண்ணன் பேய் கொல்கிறது என்பது மீதி கதை.
மகேந்திரன் ஹீரோ என்பதால் அவருக்கேற்ற ஜாலியான கலகலப்பான கதையை இயக்குனர் அருண் கார்த்திக் உருவாக்கியுள்ளார் என்பது தெரிகிறது. மூன்று நண்பர்களில் ஒருவராக வரும் மகேந்திரன் கலகலப்பாக நடிக்க முயற்சித்து இருந்தாலும் மற்றவர்களிடம் இருந்து தன்னை தனித்துக்காட்ட பெரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை.
நாயகிகள் ஆரத்தி பொடி, காவியா அறிவுமணி இருவரில் பிளாஷ்பேக்கில் வரும் காவியா நம் மனதை கவர்ந்து கொள்கிறார். ஆரத்தி பொடியும் மனதை அள்ளுகிறார்.
அதே சமயம் ஹாரர் படமாக இருந்தாலும் அதை பாசிட்டிவாக காட்டி இருப்பதும் அதில் ஃப்ளாஷ்பேக்கில் வரும் பேயின் கதையை ரொம்பவே மனதை தொடுவதாகவும் உருவாக்கியுள்ள இயக்குனருக்கும் அந்த ஃபிளாஷ்பேக் கதாபாத்திரங்களில் நடித்த நோபில் கே ஜேம்ஸ் மற்றும் காவியா அறிவுமணி ஜோடிக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
மற்றபடி படத்தை ஓரளவுக்கு காமெடியாகவே இயக்குனர் நகர்த்திச் சென்றுள்ளதால் படத்தில் பெரிய அளவில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.