திருவின் குரல் ; விமர்சனம்

இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, ஆத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் திருவின் குரல்.

கட்டிட கான்ட்ராக்டர் மாரிமுத்து(பாரதிராஜா)வின் மகன் திரு (அருள்நிதி), வாய்பேச முடியாதவர். அத்தை மகள் பவானியுடன் (ஆத்மிகா) அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. கட்டிடம் கட்டும் தளத்தில் நிகழும் விபத்தில் படுகாயமடையும் மாரிமுத்துவை, அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு லிஃப்ட் ஆபரேட்டர் ஆறுமுகத்துடன் (அஷ்ரஃப்) திருவுக்கு மோதல் ஏற்படுகிறது. ஆறுமுகமும் அங்கு பணியாற்றும் சிலரும் இரவுநேரங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைச் செய்கிறார்கள். அவர்களுடனான மோதலால், மாரிமுத்துவுக்கும் அவர் குடும்பத்துக்கும் வரும் துன்பங்களில் இருந்து திரு எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.

தந்தை -மகன் பாசத்தையும் அரசுமருத்துவமனை ஊழியர்களின் குற்றங்களையும் வைத்து சென்டிமென்ட் கலந்த க்ரைம் திரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுகஇயக்குநர் ஹரிஷ் பிரபு. யாரையும்கொல்லத் தயங்காத குற்றவாளிகளிடமிருந்து வாய் பேச முடியாத, காது கேட்காத நாயகன், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவது என்னும் அழகான ஒன்லைனைப் பிடித்த இயக்குநர், திரைக்கதையில் அதற்கு ஏற்ற சுவாரசியத்தைச் சேர்க்கத் தவறிவிட்டார்.

ஹீரோக்கள் நடிக்க தயங்கும் காது கேளாத வாய்பேச இயலாத கதாபாத்திரத்தை அருள்நிதி சவாலாக ஏற்றுகொண்டு கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம். வாய்பேச முடியாதவராக இருந்தாலும் கண்களால் அப்பா மீது வைத்துள்ள பாசத்தையும், எதிரிகள் மீதுள்ள கோபத்தையும், முறைப்பெண் மீதான காதலையும் பிரமாதமாக வெளிப்படுத்துகிறார். கட்டுமஸ்தான தேகத்தால் சமூக விரோதிகளை பந்தாடுகிறார். படம் முழுக்க பேசாமலேயே யதார்த்தமாக நடித்து ஹீரோ இமேஜுக்கு பங்கம் வராமல் பார்த்துகொள்கிறார்.

ஆத்மிகா குறைவான காட்சிகளில் வந்தாலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார். அப்பாவாக வரும் பாரதிராஜா நோயாளியாக, மகன் மீது பாசத்தைக் கொட்டுபவராக தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஆஸ்பத்திரி கழிவறையில் வழுக்கி விழும் காட்சி பதற வைக்கிறது.

சாம் சி.எஸ். இசையில் வைரமுத்து எழுதியுள்ள ‘வா தாரகையே’ பாடல் புத்தம் புது தென்றலாக மனதை லேசாக்குகிறது. ‘அப்பா என் அப்பா’ பாடல் கல் மனதையும் கரையச் செய்யும் ரகம். தந்தையர் தியாகத்தின் தேசிய கீதமாகவும் ஒலிக்கிறது. பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது. ஒளிப்பதிவாளர் சிண்டோ பொடுதாஸ் ஆஸ்பத்திரியை அங்குலம் அங்குலமாக படம் பிடித்துள்ள விதம் அருமை.

ஒரு சென்டிமென்ட் கிரைம் திரில்லர் படத்தைக் கொடுக்கும் முயற்சி, திரைக்கதை தடுமாற்றத்தால் சறுக்கியிருக்கிறது.