யாத்திசை ; விமர்சனம்

பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை கே.ஜே. கணேஷ் தயாரித்துள்ளார். முக்கியமாக அனைத்து நடிகர்களும் புதுமுகங்கள் தான்.

ஏழாம் நூற்றாண்டில், பாண்டிய பேரரசை வெல்ல சேரன் தலைமையில் சோழப் பேரரசும் போர் புரிகிறார்கள். அவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி கூட்டங்களும் துணை நிற்கிறது. போரின் இறுதியில், ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டிய பேரரசு, சோழ கோட்டையோடு சேர்த்து, மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது. இதிலிருந்து தப்பிய சில சோழர்கள் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள்.

அவர்களில் எயினர் கூட்டமும் ஒன்று. ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் சோழ மண்ணின் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என சபதம் எடுக்கிறார் எயினர் குடியின் கொதி. பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார். சொன்னபடியே ரணதீரனை வீழ்த்தி சோழ அதிகாரத்தை கையில் எடுத்தாரா கொதி? இல்லை பாண்டிய மன்னன் தன்னை நோக்கி வரும் எதிரிகளை வென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை.

எயினர் குடி என்ற சிறிய இனக்குழு ஒன்று அதிகாரம் பொருந்திய பேரரசை எதிர்த்து ‘அதிகாரம்’ பெற்றதா என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன்.

பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், அவர்களின் கலாச்சார வழிபாட்டு முறைகளின் சித்தரிப்பு, அவர்கள் வாழும் நிலபரப்பு, வீட்டு அமைப்பு, மண்பாத்திரங்கள், உணவுமுறைகள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர்களின் உலகில் நாமும் பிரவேசிக்கும் உணர்வு, காட்சிகளுக்குள் ஒன்ற உதவுகிறது.

ஷக்தி மித்ரன், சேயோன் இருவரின் அழுத்தமான ஆக்ரோஷமான நடிப்பும், அவர்களின் இறுதி சண்டைக்காட்சியும் அறிமுக நடிகர்கள் என்ற சாயலிலிருந்து விலகி நிற்கின்றன. ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் உள்ளிட்டோரின் கதாபாத்திரத்திற்கு தேவையான யதார்த்த நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.

சக்கரவர்த்தியின் பின்னணி இசையும், அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

8 கோடி பட்ஜெட்டில் இப்படி ஒரு பிரம்மாண்டமான என நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

யாத்திசை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.